கோவை மாவட்டம் கிணத்துக்கடவிற்கும் பொள்ளாச்சிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கோவில்பாளையம் ரயில் நிலையம். 1992 வரை இயங்கி வந்த இந்த ரயில் நிலையத்தில் அதையடுத்து போதிய அளவு பயணிகள் பயன்பாடு இல்லாமல் போனதால், அன்று முதல் தற்போது வரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ரயில் நிலையம் செயல்படாமல் உள்ளது என தெரியவருகிறது.

இந்நிலையில் இந்த ரயில் நிலையம் செயல்படுவதன் தேவை தற்போது அதிகரித்து வருகிறது என்பதை முள்ளுபாடி கிராம பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் செந்தில்குமார் மூர்த்தி தலைமையிலான குழு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குழுவினர் தெற்கு ரயில்வே மேலாளர் உள்ளிட்ட ரயில்வே துறை அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வந்திருக்கின்றனர்.

இதையடுத்து இதன் தேவையை பாராளுமன்றத்தில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி எடுத்துரைத்ததை அடுத்து, இந்த நிலையத்தை புதுப்பிக்க பாலக்காடு ரயில்வே கோட்டம் முடிவு செய்துள்ளது, இதற்கு தெற்கு ரயில்வேயும் அனுமதியை வழங்கி இருக்கிறது.

இன்று கோவில்பாளையம் மற்றும தன் அருகே உள்ள பட்டணம் உள்ளிட்ட பிற பகுதிகளில் மக்கள் தொகை அதிகரித்து, தொழிற்சாலைகள் பெருகி, புலம்பெயர் தொழிலாளர்கள் அங்கு அதிகமானோர் வேலை செய்து வரும் சூழல் எழுந்துள்ளது.

இங்குள்ள இளைஞர்கள் கோவையின் பிற பகுதிகளுக்கு கல்வி, வேலை தொடர்பாக செல்லவேண்டும் என்றாலும் நெடுந்தூரம் பேருந்தில் தான் பயணிக்கவேண்டும். மேலும் பிற மாவட்டம் மற்றும் மாநிலங்களை சேர்ந்த பணியாளர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டும் என்றால் கோவைக்கு பேருந்து மூலம் சென்று அங்கிருந்து ரயில் பிடித்து தங்களுடைய ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கும் போது, மீண்டும் ரயில் நிலையம் செயல்பட்டால் அது பணியாளர்கள் பலருக்கும் பெரு உதவியாக இருக்கும் என்பதை இந்த குழுவினர் சுட்டிக் காட்டினர்.

இதை அடுத்து, பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து வலியுறுத்தினர். இதை தொடர்ந்து ரயில் நிலையத்தை புதுப்பிக்க ஒப்புதல் கிடைத்துள்ளது.

ரூ.30 கோடிக்கு மேலான திட்ட மதிப்பில் இந்த ரயில் நிலையம் புதுப்பிக்கப்படும் என தெரிய வருகிறது. இதற்கான டெண்டர் நடவடிக்கைகள் அடுத்தடுத்து வர வாய்ப்புள்ளது.
ரயில் நிலையத்தை மீண்டும் புதுப்பிக்க உத்தரவு பிறப்பித்த அதிகாரிகளுக்கும் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்த ரயில்வே துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு தனது நன்றியை தெரிவிக்க செந்தில்குமார் மூர்த்தி குழுவினர் முடிவு செய்துள்ளனர். அப்போது இந்த ரயில் நிலையத்திற்கு தேவைப்படக்கூடிய பிற தேவைகளைப் பற்றியும் அவரிடம் எடுத்துரைக்க உள்ளனர்.