கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையும், தைவான் நாட்டின் தேசிய தைவான் கடல்சார் பல்கலைக்கழகமும் இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளன.

இதன் முதற்கட்டமாக, பாரதியார் பல்கலைக்கழக விலங்கியல் துறை தலைவர் ராமசுப்பிரமணியன் சமீபத்தில் தைவான் சென்று, தேசிய தைவான் கடல்சார் பல்கலைக்கழக பேராசிரியர் ஜியாங் ஷியோ ஹவாங் தலைமையிலான குழுவினருடன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கினார்.

மீன் மற்றும் இறால் வளர்ப்புக்கு தேவையான உயிர் உணவுகளை அதிகளவில் உற்பத்தி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், பேராசிரியர் ஜியாங் மற்றும் அவரது குழுவினர் விரைவில் இந்தியா வர உள்ளனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தேர்வு செய்து, நன்னீர் மீன் மற்றும் அலங்கார மீன் வளர்ப்பு, மீன் இனப்பெருக்கம் உள்ளிட்டவற்றில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் லாபகரமான மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான தொழில்நுட்ப பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன. தைவான் சென்று ஆராய்ச்சி பணிகளை தொடங்கிய விலங்கியல் துறை தலைவர் ராமசுப்பிரமணியனுக்கு பல்கலைக்கழக பதிவாளர் ராஜவேல், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.