தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு விமானம் மூலம் 2 டன் சீடை, முறுக்கு உள்ளிட்ட பாரம்பரிய தின்பண்டங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தீபாவளியை ஒட்டி 5 நாட்களில் மொத்தம் 10 டன் சரக்குகள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மேலும், 6 நாட்களில் கோவை விமான நிலையம் வழியாக 51,258 பேர் பயணம் செய்துள்ளனர்.
கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், அபுதாபி, ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
விமான நிலைய வட்டாரங்கள் கூறியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை, கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு விமானம் மூலம் 10 டன் எடையிலான சரக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில், சுமார் 2 டன் சீடை, முறுக்கு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

உள்நாட்டு சரக்கு போக்குவரத்திலும் தீபாவளியை முன்னிட்டு உணவுப் பொருட்களின் அனுப்புதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கோவையில் தயாரிக்கப்பட்ட ரெடிமிக்ஸ் வகை பவுடர் இனிப்புகள் அதிக அளவில் பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கிருந்து ‘பாண்டட் விமானங்கள்’ திட்டத்தின் கீழ் பல்வேறு வெளிநாடுகளுக்கு அவை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வழித்தடங்களில் மொத்தம் 170 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 51,258 பேர் பயணம் செய்துள்ளனர்.
இதில், தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 7ம் தேதி 29 விமானங்கள் இயக்கப்பட்டு, 8,340 பேர் பயணம் செய்தனர். நவம்பர் 10ம் தேதி அதிகபட்சமாக 30 விமானங்கள் இயக்கப்பட்டு, 9,213 பேர் பயணம் செய்துள்ளனர். இவ்வாறு விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
