கோவையில் உள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்தில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது ஆங்கில நூல்கள் பிரிவிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ஆராய்ச்சி மாணவர் பிரேம் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
விண்டேஜ் பிரஸ் லிமிடெட் பதிப்பகத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட ஆங்கிலப் புத்தகத்தில், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தரவுகள் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ISBN எண் தவறானது என்றும், பதிப்பகத்தின் முகவரியும் போலியானது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
சுமார் 300 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தின் அதிகபட்ச சில்லறை விலை இந்திய மதிப்பில் ரூ.9,900 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நூலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஆங்கிலப் புத்தகங்களை ஆய்வு செய்ததில் 257 புத்தகங்கள் இருப்பதாகவும், அவற்றில் பல்வேறு சந்தேகத்திற்குரிய அம்சங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழ் நூல்கள் கொள்முதல் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து சர்ச்சை நீடித்து வரும் நிலையில், தற்போது ஆங்கில நூல்கள் பிரிவிலும் ஏஐ தரவுகள், தவறான ISBN எண்கள் மற்றும் போலியான முகவரி தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
