கோவையில் செம்மொழிப் பூங்காவில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகரின் முக்கிய சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தலங்களில் ஒன்றாக உருவாக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவில், தினசரி ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பூங்காவின் பராமரிப்பு, தூய்மை பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தங்களுக்கு வழங்க வேண்டிய கடந்த இரண்டு மாதங்களுக்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஊதியம் வழங்கப்படாததால் குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நிலுவையில் உள்ள இரண்டு மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, செம்மொழிப் பூங்கா வளாகத்தில் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தங்களது கோரிக்கைக்கு அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும், நிலுவை ஊதியத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
