ஜிம்பாப்வே சம்மிட்-2026 நிகழ்வையொட்டி, அந்நாட்டின் உயர்மட்ட பிரதிநிதிகள் கோவை கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை சார்ந்த செயல்பாடுகளைப் பார்வையிட்டனர்.
கே.பி.ஆர். குழுமத் தலைவர் கே.பி. ராமசாமி, கே.பி.ஆர்.கல்வி நிறுவனங்களின் செயலர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் ஜிம்பாப்வே பிரதிநிதிகளை வரவேற்றனர்.
தொடர்ந்து, கல்வி மேம்பாடு, மாணவர்களுக்கான சர்வதேச வாய்ப்புகள் மற்றும் உலகளாவிய கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினர்.

ஜிம்பாப்வே அதிபரின் கல்வி உதவித்தொகை சிறப்பு ஆலோசகர் ரேமோர் மச்சிங்குரா, இந்தியாவுக்கான ஜிம்பாப்வே தூதர் ஸ்டெல்லா ந்கோமோ, கல்வி உதவித்தொகை நிர்வாக தலைமை இயக்குநர் வட்சனை கச்சேரே, நிதித்துறை இயக்குநர் பினியாஸ் மன்யாங்கே மற்றும் கல்வி உதவித்தொகை நிர்வாக இயக்குநர் அன்னா நியாம்வான்சா ஆகியோர் குழுவில் இடம்பெற்றனர்.
கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய புதுமையான திட்டங்களைப் பார்வையிட்ட பிரதிநிதிகள், அவற்றின் தொழில்நுட்ப அம்சங்கள், நடைமுறைப் பயன்பாடுகள் மற்றும் சமூகப் பயன்கள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
தொடர்ந்து, கல்லூரியின் தொழில்துறை கூட்டாண்மை நிறுவனங்களான சம்மிட்ஸ் மற்றும் நோவாவைப் பார்வையிட்டு, தொழில்துறை சார்ந்த கற்றல், மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் திறன் பயிற்சி முறைகள் குறித்து அறிந்துகொண்டனர்.
