ஈஷா அவுட்ரீச் இயக்கம் மற்றும் கங்கா மருத்துவமனை இணைந்து நடத்திய கிராமப்புற மற்றும் மலைவாழ் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம், ஈஷா ஆதியோகி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகாமில் ஈஷாவைச் சுற்றியுள்ள பழங்குடியின கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

கங்கா மருத்துவமனையின் சார்பில் நவீன கருவிகள் மூலமாக மார்பகப் புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

breast cancer 2 scaled

முகாம் குறித்து மருத்துவமனையின் மார்பகப் புற்றுநோய் அறுவைச் சிகிச்சை மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் மருத்துவர் ராஜா சண்முக கிருஷ்ணன் கூறிதாவது: கங்கா மருத்துவமனை சார்பில் 2020ம் ஆண்டு முதல் ப்ராஜக்ட் சக்தி திட்டத்தில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் மேற்கொண்டு வருகிறோம்.

இந்த முகாம் எங்களது 150வது முகாம். இதுவரை சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளோம். அதில் புற்றுநோய் கண்டறியப்பட்ட 81 மார்பகப் புற்றுநோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்துள்ளோம்.

அந்த வகையில் அதிகளவிலான சேவைப்பணிகளை மேற்கொண்டு வரும் ஈஷா அறக்கட்டளையுடன்  இணைந்து எங்களின் 150வது முகாமை ஆதியோகி வளாகத்தில் ஏற்பாடு செய்தோம். இங்கு அனைத்து பரிசோதனைகளும் முழுவதும் இலவசமாக மேற்கொள்ளப்படடன. இத்துடன், பெண்களுக்கு தேவையான ஆலோசனைகளும் வழங்கியுள்ளோம் என்றார்.

ஈஷா அவுட்ரீட் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சந்திரகாசா கூறியதாவது: பழங்குடியினப் பெண்கள் பெரும்பாலும் இதுபோன்ற மருத்துவப் பரிசோதனை முகாம்களுக்கு செல்ல மாட்டார்கள். இதுதொடர்பாக,  தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு, அவர்கள் முகாம்களுக்கு வரத் தொடங்கியுள்ளனர் என்றார்.