கோவை மாநகரத்தின் பரபரப்பான பகுதிகளில் ஒன்றான திருச்சி சாலையில் அரசு மருத்துவமனைக்கு எதிரே அமைந்துள்ள திருச்சி ரோடு பேருந்து நிறுத்தத்தில் ‘குடிமகன்’களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பேருந்து நிலைய வளாகத்தில் மது அருந்திவிட்டு அங்கேயே படுத்து உறங்குவது, மது அருந்திய பாட்டில்களை அருகிலேயே வீசுவது போன்ற சம்பவங்களில் குடிமகன்கள் அதிகம் ஈடுபடுவதாகவும் மது போதையில் பிறருடன் அவ்வப்போது சண்டையிடுவதையும் வாடிக்கையாக கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பகுதி அருகே மூன்று பள்ளிகள் இயங்கி வருகின்றன அதில் இரண்டு மாணவிகளுக்கான பிரத்தியேக பள்ளி. அரசு மருத்துவமனைக்கு எண்ணற்ற பெண்கள் சிகிச்சைக்காகவும், நோயாளிகளை பார்க்கவும் வருகின்றனர். இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் அவர்கள் அமரலாம் என்றால் அந்த வளாகத்திலேயே ஆண்கள் பலர் மது அருந்திவிட்டு படுத்து உறங்குவது, வெட்டியாய் தரையில் படுத்து கொண்டு பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
சிலர் மது அருந்தவிட்டாலும் சொகுசாக இருக்கைகள் அருகே படுத்து உறங்குவதால், இருக்கைகள் காலியாக இருந்தாலும் அதில் அமர பயணிகள் விரும்பாத நிலை தொடர்கிறது.
சிலர், பார்ப்பதற்கே படுமோசமான நிலையில் அவ்வளாகத்தில் உறங்குவது, பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது . இது ஒரு புறம் இருக்க பேருந்து நிறுத்த வளாகத்திற்கு உள்ளே சுகாதார சீர்கேடு அதிகம் ஏற்படும் சம்பவங்கள் நிகழ்கின்றன.
வளாகத்திற்கு உள்ளே குவியல் குவியிலாக குப்பைகள், தொட்டிகளில் வைக்கப்பட்டு அங்கேயே பிரிக்கப்படுகிறது. பேருந்து நிலையத்தின் மற்றொரு பகுதியில் அதிக அளவில் எலி தொல்லைகள் இருக்கின்றன.
பேருந்து நிறுத்தத்தின் ஒரு பகுதியில் சேரும் சகதியும் இருக்கக்கூடிய இடங்களில் பொந்து ஏற்படுத்தி எலிகள் பெருகி வருகின்றன. பேருந்து நிறுத்த வளாகத்தில் சிந்திக்கிடக்கும் உணவு பொருட்களை அவைகள் உட்கொண்டு அங்கேயே இருக்கின்றன. இதனால் பயணிகளுக்கு பல்வேறு வகைகளில் அசௌகரியம் ஏற்படுகிறது.
எனவே குடிமகன்களின் அட்டகாசத்தை அடக்க வேண்டும் எனவும், சுகாதார சீர்கேடுகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் எனவும் பயணிகள் கேட்டுக் கொண்டனர்.

