ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் என்.எஸ்.எஸ். பிரிவு சார்பில் ரேஸ் கோர்ஸ் பகுதியில் வியாழனன்று போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற  இந்த பேரணியை கோவை மாநகர காவல்துறை உதவி ஆணையர் கோகுலகிருஷ்ணன் பேரணியை துவக்கி வைத்தார்.

மத்திய இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், தமிழ்நாடு நாட்டு நலப்பணித்திட்ட இயக்குநரகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவை உடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணியில், போதைத் தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வும் நடைபெற்றது. அதில் பி4 காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜெயசந்திரன் கலந்துகொண்டார்.

ரேஸ் கோர்ஸ் பகுதியில் செல்லும் பாதசாரிகள், வாகனஓட்டிகள், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திட  மாணவ மாணவிகள் போதைப் பொருளுக்கு எதிரான வசங்கங்கள் கொண்ட பதாகைகளைக் கைகளில் ஏந்தி சென்றது பலரின் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிகழ்விற்கான ஒருங்கிணைப்பை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகதீஷ்வரன், திட்ட அலுவலர்கள் விஸ்வநாதன், கீா்த்திவாசன், சஹானா ஃபாத்திமா, சூர்யா ஆகியோர் செய்திருந்தனர்.