கோவை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன, அதில் ஒன்று முறையற்ற பார்க்கிங் நடவடிக்கைகள்.
கோவை அவிநாசி சாலையின் பிரதான பகுதிகள் பலவற்றின் ஓரங்களில் டாக்சிகள் வெகுநேரம் ஹாயாக நிறுத்தப்படுகிறது தொடர்கிறது. இவற்றில் சில சாலையின் ஓரத்தில் நிற்காமல் சாலைகளின் முக்கிய பகுதியின் எல்லைக்குள் வருகின்றன.

இதனால் வாகனங்கள் செல்லும்போது சற்று சாலையை விட்டு ஒதுங்கி செல்லவேண்டியதாக உள்ளன. மேலும் சாலையில் நடக்கும் பாதசாரிகள் இவ்வாறு கோணல் மாணலாக நிறுத்தப்படும் வாகனங்களை கடந்து செல்லும்போது அவர்களும் சாலையின் முக்கிய பகுதி அருகே நடந்து செல்லவேண்டிய நிலைமை ஏற்படுகிறது.
இதுபோன்று கோவை மாநகரத்தின் பல பகுதிகளில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. குறிப்பாக டாக்சி வகை வாகனங்கள் அதிக விதிமீறல்களில் ஈடுபடுகின்றன.

அண்மையில் நடந்த ஒரு நிகழ்வு!
கோவை பங்கஜா மில் ரோடு வழியே சமீபத்தில் பார்க்கிங் தொடர்பான நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அவ்வழியே உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு எதிர்புறம் டாக்சி ஸ்டாண்ட் ஒன்று சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டு பல காலமாக செயல்பட்டு வருகிறது.
மருத்துவமனைக்கு காரில் வந்த ஒருவர் அங்கு டாக்சி ஸ்டாண்ட் இருப்பதை அறியாமல் வாகனத்தை அங்கு நிறுத்த முயன்றார். அங்கு ஒரே ஒரு டாக்சி தான் இருந்தது, பிற வாகனங்கள் நிறுத்தப்பட இடமும் தாராளமாக இருந்தது. ஆனால் அவர் காரை நிறுத்த முயன்றபோது அங்கு நின்றுகொண்டிருந்த டாக்சி ஓட்டுனர்கள், அவரை தடுத்தனர்.
சாலை ஓரம் என்றாலும், தாங்கள் டாக்சி ஸ்டாண்ட் என பதிவு செய்து வைத்துக்கொண்டுள்ள இடத்தில் வேறு யாரும் அத்துமீறி வாகனத்தை நிறுத்தக்கூடாது என பதறும் அவர்கள், பொது இடங்களில் பாதசாரிகள், பிற வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக நிறுத்தலாமா?

