ஸ்ரீ காமாக்ஷி ஆர்ஷ சம்ஸ்கிருதி டிரஸ்ட் சார்பில், வீடுகளில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள தெய்வப் படங்கள், விக்ரகங்கள் உள்ளிட்ட புனிதப் பொருட்களை, முறையாக சேகரித்து மறுசுழற்சி செய்வதற்கான ‘உத்வாசன சேவா’ நிகழ்ச்சி கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தி சேவாஸ்ரம் டிரஸ்ட் வளாகத்தில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை இந்த சிறப்பு சேகரிப்பு முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், வீடுகளில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் பிரேம் செய்யப்பட்ட அல்லது லேமினேட் செய்யப்பட்ட தெய்வப் படங்கள் மற்றும் சிலைகள், உலோக பூஜைப் பொருட்கள், ஆன்மிகம் மற்றும் ஸ்லோக புத்தகங்கள், காலண்டர்கள் மற்றும் பஞ்சாங்கங்கள் உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டன.

பொருட்களை கொண்டு வருவதற்காக பொதுமக்கள் துணி அல்லது சணல் பைகள், அட்டை பெட்டிகள் போன்றவற்றை மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

இது குறித்து அறக்கட்டளையின் நிறுவனர் வசுதா சுந்தர் கூறுகையில்:
ஸ்ரீ காமாக்ஷி ஆர்ஷ சம்ஸ்கிருதி டிரஸ்ட் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. காஞ்சி பெரியவரின் வழிகாட்டுதலுடன் பல்வேறு தர்மப் பிரச்சார நடவடிக்கைகள், பயிலரங்குகள், வினாடி வினா போட்டிகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் முக்கிய முயற்சிகளில் ஒன்றாக ‘உத்வாசன சேவா’ திட்டம் கடந்த 2024 ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. கோயில்கள் மற்றும் பொது இடங்களில் தெய்வப் படங்கள், விக்ரகங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் மரத்தடிகளில் வைக்கப்படுவதைத் தொடர்ந்து, இதற்கான முறையான செயல்முறையை உருவாக்கும் நோக்கில் இந்த முயற்சி தொடங்கப்பட்டது.
இதன்படி பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படும் புனிதப் பொருட்கள், முதலில் படம், மரம், காகிதம், பிளாஸ்டிக், கண்ணாடி உள்ளிட்டவையாகப் பிரிக்கப்பட்டு, மறுவிற்பனை மற்றும் மறுசுழற்சிக்காக உரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன.

இதன் மூலம் புனிதப் பொருட்களுக்கு உரிய மரியாதையுடன் வழியனுப்பு வழங்குவதுடன், அவை வீணாவதும் தடுக்கப்படுகிறது. பெங்களூரு மற்றும் சென்னையில் இதுபோன்ற சேகரிப்பு முகாமை நடத்தியுள்ளோம்.

கோவையில் நடைபெற்ற முதல் சேகரிப்பு நிகழ்வில் சுமார் 40 டன் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்தச் சேவையை பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
