கோவை மாநகராட்சி பிரதான அலுவலகம் மற்றும் ஐந்து மண்டல அலுவலகங்களில் நடைபெற்ற சாலையோர வியாபாரிகளுக்காக வங்கி கடன் பெறும் சிறப்பு முகாமில் 713 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடன் பெறும் சிறப்பு முகாம் மாநகராட்சி பிரதான அலுவலகம் மற்றும் ஐந்து மண்டல அலுவலகங்களில் கடந்த 24ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் “லோக் கல்யாண் மேலா” சிறப்பு முகாம் மண்டல வாரியாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகள் வங்கிகள் மூலம் ரூ.15,000 கடன் பெற ஏதுவாக, நடைபெற்ற சிறப்பு முகாமில் (28.08.2026) இன்று வரை கிழக்கு மண்டலத்தில் 187 விண்ணப்பங்களும், வடக்கு மண்டலத்தில் 167 விண்ணப்பங்களும், மேற்கு மண்டலத்தில் 145 விண்ணப்பங்களும், தெற்கு மண்டலத்தில் 43 விண்ணப்பங்களும், மாநகராட்சி பிரதான அலுவலகம் மற்றும் மத்திய மண்டலத்தில் 171 விண்ணப்பங்களும் என மொத்தம் 713 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
