கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ‘சதாவரி சிறந்த ஆரோக்கியத்திற்காக’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய மருத்துவத் தாவர வாரியம் நிதியுதவியுடன் கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்வை, கோவை ஆர்ய வைத்திய பார்மசி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தேவிதாஸ் வாரியர், கல்லூரியின் செயலாளர் சி.ஏ.வாசுகி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கல்லூரி செயலாளர் சி.ஏ. வாசுகி பேசுகையில்: ஒரு வருட கால சதாவரி விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கும், விவசாயிகளுக்கு அதன் நாற்றுக்களை வழங்குவதற்கும் இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் தேசிய மருத்துவத் தாவர வாரியம் கல்லூரிக்கு ரூ.18.9 லட்சம் நிதியுதவி வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.

தேவிதாஸ் வாரியர் பேசுகையில்: சதாவரி மூலிகைகளின் அரசி எனப் போற்றப்படுகிறது. இதில் காணப்படும் உயிரியல் செயற்பாட்டுக் கூறுகள் பல்வேறு ஆயுர்வேத மற்றும் மூலிகை சார்ந்த தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இனப்பெருக்க ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு திறன், செரிமான ஆரோக்கியம், உடல் ஊட்டச்சத்து மற்றும் உயிர்ச்சக்தி போன்ற பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.
கருத்தரங்கின் ஒரு பகுதியாக மாணவர்கள், சதாவரி பொடியைப் பயன்படுத்தி தயாரித்த 31 வகையான உணவு மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட தயாரிப்புகளை காட்சிப்படுத்தினர். சதாவரியின் அறிவியல் ஆராய்ச்சி, மருத்துவப் பயன்பாடுகள் மற்றும் தொழில்முனைவோர் வாய்ப்புகள் குறித்து பல்வேறு சிறப்பு அமர்வுகள் நடைபெற்றன.
கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் சங்கீதா, திட்ட இயக்குநர் சந்தோஷ்குமார், உயிர்வேதியியல் துறைத் தலைவர் நரேந்திரகண்ணன், மாணவர்கள் பங்கேற்றனர்.
