கோவை, போத்தனூர் பிரதான சாலை குறிச்சி பிரிவு முதல் செட்டிபாளையம் சாலை வரை விபத்து ஏற்படக்கூடிய இடங்களில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக, மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல்துறை உள்ளிட்ட அலுவலர்களுடன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக பல்வேறு இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்பட்டுள்ளனவா, பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் சாலை சீரமைப்புப் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளனவா, வாகனப் போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் சாலைகள் பராமரிக்கப்படுகின்றனவா என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.

4 2 scaled

மேலும், சாலைப் பாதுகாப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்ட பின்னர், பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் காலதாமதமின்றி சாலைகளை உரிய தரத்துடன் சீரமைக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், சாலைகளில் பள்ளங்கள் மற்றும் மேடு பள்ளங்கள் காணப்படும் இடங்களை உடனடியாகக் கண்டறிந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், சாலை சீரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.