ஈஷா யோக மையத்திற்கு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
பல்வேறு கலாச்சார பின்னணிகளை கொண்ட மக்கள் ஈஷா யோக மையத்திற்கு வந்து தங்கி இருந்து ஈஷாவின் பல்வேறு ஆன்மீக, சமூக நலப் பணிகளில் தங்களை முழு நேரமாக ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். ஈஷாவில் தங்கியிருக்கும் தமிழ் அல்லாத பிற மொழிகளை தாய் மொழியாக கொண்டிருக்கும் மக்களுக்கு ஈஷாவில் தமிழ் மொழியை கற்றுத்தரும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து ஈஷாவில் தமிழ் மொழி வகுப்புகளை ஒருங்கிணைத்து நடந்தும் அருண் கூறுகையில், ஈஷாவில் பல்வேறு மொழிகளை பேசும் மக்கள் தன்னார்வலர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு தமிழ் மொழியில் எழுத, படிக்க, பேச, பாட மற்றும் உரையாடல்களை உருவாக்க பயிற்சி அளிக்கப்படுகின்றது. இந்த பயிற்சி வகுப்புகள் முதல் நிலையில் 12 நாட்கள் தொடர் பயிற்சி வகுப்புகளாகவும், அடுத்த நிலையில் வாரத்திற்கு ஒரு நாள் வகுப்பு என 10 முதல் 12 வாரங்கள் நடைபெரும் வகையில் நடத்தப்படுகிறது.
முதல் நிலை பயிற்சியில் ஒவ்வொரு நாள் வகுப்புகளும் மூன்று பகுதிகளாக பிரித்து நடத்தப்படுகிறது. ஒரு நாளில் இரண்டு மணி நேரம் நடைபெறும் வகுப்பில் முதல் பகுதியில் உயிர் எழுத்துக்கள் துவங்கி வார்த்தைகளை எழுதுவது வரை பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது.
இரண்டாம் பகுதியில் தமிழ் வார்த்தைகளை படிக்க பயிற்சி அளிக்கப்படுகின்றது. மூன்றாம் பகுதியில் தமிழ் பண்பாட்டின் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தும் கதைகள் மூலமாக குறிப்பாக கோவில்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், பக்தி உள்ளிட்டவைகள் தொடர்பான கதைகள் மூலம் தமிழ் மொழியுடன் பண்பாட்டையும் கற்றுத் தருகிறோம். இதுவரை 5 வகுப்புகள் முடிவடைந்துள்ளன, இதில் சமீபத்தில் முடிவடைந்த பயிற்சி வகுப்பில் 75 பேர் கலந்து கொண்டனர் என அவர் கூறினார்.
தமிழ் மொழி பயிற்சி வகுப்பில் பங்கேற்ற தைவான் நாட்டை சேர்ந்த ஜெனி கூறுகையில், எனக்கு நீண்ட நாட்களாகவே தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. இந்த வகுப்பின் மூலம் முறையாக எப்படி எழுதுவது, படிப்பது போன்றவற்றை கற்றுக் கொண்டோம் எனக் கூறினார்.