கோவை ரயில் நிலையத்தில், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் நடமாட உதவி தேவைப்படும் பயணிகளுக்கு உதவும் வகையில் ‘வழி’ என்ற 24 மணி நேரமும் செயல்படும் புதிய உதவி மையம் திட்டம் தொடங்கப்பட உள்ளது. விஸ்வநாதன் சுடலைமுத்து அறக்கட்டளை மற்றும் சுவர்கா அறக்கட்டளை இணைந்து இந்த உதவி மையத்தை தொடங்க உள்ளன. இதற்கான ஒப்புதலை மத்திய ரயில்வே அமைச்சகம் வழங்கியுள்ளது.

இதன் மூலம் ரயில் நிலையத்திற்குள் வருவது முதல் பிளாட்பாரங்கள் வழியாக ரயில் பெட்டியில் உள்ள இருக்கையை அடைவது வரை சக்கர நாற்காலி உதவி வழங்கப்படும். ரயில்வே பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு, ரயிலில் எளிதாக ஏறவும், இறங்கவும் சாய்வுப்பாதைகள் அமைக்கப்படும். தொலைபேசி, வாட்ஸ் அப் மூலம் பயணிகள் ரயில் நிலையத்திற்கு வரும் முன்பே இந்த உதவிகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கான இந்த சிறப்பு உதவி மையத்திற்கு தேவையானவற்றை விஸ்வநாதன் சுடலைமுத்து அறக்கட்டளை வழங்கும்.  இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி புலியகுளம் பகுதியில் உள்ள சுவர்கா அறக்கட்டளையில் திங்கட்கிழமை நடைபெற்றது.

இதில் விஸ்வநாதன் சுடலைமுத்து அறக்கட்டளையின் அறங்காவலர் சுரேஷ்குமார், சுவர்கா அறக்கட்டளையின் நிறுவனர் ஸ்வர்ணலதா ஆகியோர் கையெழுத்திட்டனர்.