கோவை அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ. தூரத்திற்கு கட்டப்பட்ட ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில், ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் செயல்படும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது அவற்றின் செயல்திறன் பரிசோதனை மற்றும் மென்பொருள் தகவல் உள்ளீட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் வாகனங்கள் 60 கி.மீ. வேக வரம்பிலும், ஏறும், இறங்கும் தளங்களில் 30 முதல் 40 கி.மீ. வேக வரம்பிலும் செல்ல வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், பல வாகன ஓட்டிகள் இதனை பின்பற்றுவதில்லை. குறிப்பாக, இரவு நேரங்களில் அதிவேகமாக பயணிப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

இதனைத் தடுக்கும் வகையில், விதிமுறை மீறுபவர்களை உடனுக்குடன் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாநில நெடுஞ்சாலைத்துறையால் 44 ஏ.ஐ. கண்காணிப்பு கேமராக்களும், டிஸ்ப்ளே போர்டுகளும் அமைக்கப்பட்டன.

கடந்த 25, 26ம் தேதிகளில் கேமராக்களின் செயல்பாடு சோதனை செய்யப்பட்டதாகவும், தொடர்ந்து ஒரு மாத காலம் தகவல் உள்ளீட்டு மற்றும் கண்காணிப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதிவேகம், ஹெல்மெட் அணியாதது, சீட் பெல்ட் அணியாதது உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல்களை ஏ.ஐ. கேமராக்கள் தானாக கண்டறியும். மேம்பாலத்தில் ஏறியதில் இருந்து இறங்கும் வரை முழு கண்காணிப்பு இருக்கும். விதிமீறல் நிகழ்ந்தவுடன், சம்பந்தப்பட்ட வாகன எண் மற்றும் விதிமீறல் விவரங்கள் டிஸ்ப்ளே போர்டில் உடனடியாக காட்டப்படும். அதே நேரத்தில் அபராத அறிவிப்பும் வாகன உரிமையாளரின் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.

இந்த திட்டத்திற்கான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் பி.எஸ்.ஜி. டெக் கல்லூரி அருகே அமைக்கப்பட்டுள்ளது. ஏ.ஐ. மென்பொருளில் கண்காணிப்பு மற்றும் விதிமுறை தொடர்பான தகவல்கள்  பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதாகவும்,  ஒரு மாத பரிசோதனைக்குப் பின், முழு அமைப்பும் போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.