ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் “மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாயம்” எனும் தலைப்பில் கருத்தரங்கம், கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் உள்ள சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் ஜூன் 22ம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக சென்னை பிரஸ் கிளப்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் கூறியதாவது: இவ்வியக்கம் மரம் சார்ந்த விவசாயத்தை விவசாயிகள் மத்தியில் சேர்த்து வருகிறது. இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்துக்கு மாறியுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் கடந்தாண்டு 1.21 கோடி மரங்கள் விவசாய நிலங்களில் நடப்பட்டன.

மரம் சார்ந்த விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு முழுக்க கருத்தரங்குகளை நடத்தி வருகிறோம். இந்தாண்டு முதல் நிகழ்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் குலசேகரத்தில் ” மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாயம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

இதில் பெங்களூர் தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றும் செந்தில்குமார், இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டியண்ணன், ஆர்த்தி மற்றும் பைசல் சிறப்புரை ஆற்றவுள்ளனர்.

மரம் சார்ந்த விவசாயத்தில் தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்ற முன்னோடி விவசாயிகளும் கலந்து கொண்டு அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவுள்ளனர். கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர் 94425 90079, 94425 90081 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் எனக் கூறினார்.