கோவை மாவட்டம், நாயக்கன்பாளையத்தில் இருந்து கோவனூர் செல்லும் பிரதான சாலையோரக் குப்பை மேடுகளில், மான் கூட்டம் ஒன்று பிளாஸ்டிக் கழிவுகளை மேய்ந்து கொண்டு இருக்கும் அவலக் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி அதிரவைத்துள்ளது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் அடியோடு பொய்த்துப் போனதன் விளைவாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான வறட்சியும், கோடை காலத்தை மிஞ்சும் வகையில் வெயிலின் தாக்கமும் சுட்டெரித்து வருகிறது.

காடுகளுக்குள் உணவிற்கும், தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், வனவிலங்குகள் கூட்டம், கூட்டமாகத் தற்பொழுது ஊருக்குள் ஊடுருவத் தொடங்கி உள்ளன. ​இந்நிலையில், வனப்பகுதியை ஒட்டி உள்ள கோவனூர் சாலையோரக் குப்பை மேட்டில் கொட்டி வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகள், வீணான உணவுப் பொருட்களை, மான் கூட்டம் ஒன்று தின்று பசியாறிக் கொண்டிருந்தது. இந்த காட்சியை அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.

இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளால் மான் கூட்டத்திற்கு நச்சுத்தன்மை ஏற்பட்டு உயிரிழக்கும் விபரீதம் நேரிடும் முன்பு, வனத்துறை அதிகாரிகள் உடனடியாகக் காடுகளுக்குள் செயற்கைத் தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கவும், வன எல்லையோரக் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்