கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லசந்திரக் குன்றுகளில் அமைந்துள்ள 300க்கும் மேற்பட்ட பெருங்கற்கால கல்திட்டைகள், தொல் தமிழர்களின் வாழ்வியல், தொழில்நுட்பம், கணிதம், கட்டடக்கலை மற்றும் ஆன்மிக நம்பிக்கைகளை எடுத்துரைக்கும் வரலாற்றுச் சின்னங்களாக உள்ளன.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் திறன் மேம்பாட்டு மையத்தின் கீழ் செயல்படும் கல்வெட்டியல் மற்றும் மரபு மேலாண்மைப் பட்டயப்படிப்பின் பொறுப்பாசிரியர் ச. இரவி வழிகாட்டுதலில், 25 மாணவர்கள் அடங்கிய குழுவினர் அக்., 11ல் மல்லசந்திரத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். மொழி தோன்றுவதற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த தொல் தமிழர்களின் ஈமச்சின்னங்களைக் கண்டறிந்து ஆவணப்படுத்துவது ஆய்வின் நோக்கமாகும்.

5d 5 scaled

கல்திட்டை (கல்லறை) கட்டமைப்பும் தொழில்நுட்பமும்

சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன் கால்நடை வளர்ப்புச் சமூகமாக மாறிய இனக்குழு மக்கள், மோதல்களில் வீரமரணம் அடைந்தவர்களுக்காக மலையின் மேல் கல்திட்டைகளை அமைத்துள்ளனர். நான்கு செவ்வகக் கற்பலகைகளால் சுவர்கள் எழுப்பி, அதன் மீது ஒரே கற்பலகையை மூடுகல்லாகப் பொருத்தியுள்ளனர்.

கற்கள் ஒன்றையொன்று தாங்கும் சுவஸ்திக் வடிவ அமைப்புகளும், வட்ட வடிவக் கற்சுவர்களும் காணப்படுகின்றன. இடுதுளைகளின் விட்டம் 40 செ.மீ., முதல் ஒரு மீட்டர் வரை அமைந்துள்ளது. கற்களின் அளவீடுகள் அக்கால மக்களின் கணித அறிவை வெளிப்படுத்துகின்றன.

5e 4 scaled

இடுதுளைகளும் சூரிய ஒளி நம்பிக்கையும்

அனைத்துக் கல்லறைகளின் கிழக்குப் பகுதியில் வட்ட வடிவ இடுதுளைகள் செதுக்கப்பட்டுள்ளன. சூரிய ஒளி கிழக்கே தோன்றி வெளிச்சத்தைத் தருவதைப் போல, இந்த இடுதுளைகள் சூரிய ஒளியை நோக்கி அமைக்கப்பட்டுள்ளன.

இறந்தவர்களின் ஆன்மா வெளியே செல்வதற்கும், மீண்டும் வந்து தங்குவதற்கும் இவை வழியாக இருந்ததாக நம்பியுள்ளனர். கால்நடை மேய்க்கும் இக்குழுவினர், இறந்தவரின் நினைவாக ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் நடுகல் நிழல் மூலம் காலத்தைக் கணித்து, இடுதுளை வழியாகப் படையல் இட்டுள்ளனர்.

5c 5 scaled

பாறை ஓவியங்களில் ஓவிய மொழி

கல்லறைகளின் உட்புறங்களில் வெள்ளை, செம்பழுப்பு நிறங்களில் மனிதர்கள் வேட்டையாடுதல், ஆயுதங்களுடன் போரிடுதல், மந்திரவாதிகள், பறவைத்தலை மனித உருவங்கள் உள்ளிட்ட ஓவியங்கள் காணப்படுகின்றன. 3,000 முதல் 5,000 ஆண்டுகளைக் கடந்தும் இவ்வண்ணங்கள் நிலைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. எழுத்து மொழிக்கு முந்தைய காலத்தில் கருத்துகளைப் பதிவு செய்த ஓவிய மொழியாக இவை விளங்குகின்றன.

இனக்குழுத் தலைவர்களின் கல்லறைகள்

நூற்றுக்கணக்கான சாதாரணக் கல்லறைகளுக்கு இடையே, இனக்குழுத் தலைவர்களுக்காக அரைவட்ட வடிவத் தாங்கு கற்பலகைகளுடன் பிரம்மாண்டமான கல்லறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

5a 13 scaled

பண்டைய வழிபாட்டு முறை மற்றும் ஆன்மீகம்

இன்றைய தமிழர்களின் குலதெய்வ, மாலதெய்வ மற்றும் வீட்டுத்தெய்வ வழிபாடுகளின் வேர்கள் இப்பெருங்கற்கால ஈமச்சின்னங்களிலேயே அடங்கியுள்ளன. இறந்த முன்னோர்களைக் கடவுளாகப் பாவித்து நடுகல் மற்றும் நினைவுச் சின்னங்களை எழுப்பி வழிபடும் முறை 5000 ஆண்டுகளுக்கு முன்பே கால்நடைச் சமுதாயத்தில் வேரூன்றியிருந்ததை மல்லசந்திரச் சின்னங்கள் நிரூபிக்கின்றன.

எனினும், புதையல் குறித்த மூடநம்பிக்கைகளால் இத்தகைய வரலாற்றுச் சின்னங்கள் சமூக விரோதிகளால் தொடர்ந்து சிதிலமடைந்து வருகின்றன. தொல் தமிழர்களின் வரலாற்றையும் தொழில்நுட்ப அறிவையும் எடுத்துரைக்கும் இவற்றை முறையாக ஆவணப்படுத்திப் பாதுகாப்பது அரசு மற்றும் பொதுமக்களின் கடமையாகும்.