கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரிக்கு, இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் வழங்கப்படும் 2026-ம் ஆண்டிற்கான தொழில்துறை – கல்வி நிறுவனக் கூட்டாண்மை விருது, பிளாட்டினம் பிரிவில் கிடைத்துள்ளது. இதன் மூலம் கல்லூரி தேசிய அளவில் குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தி, ஆராய்ச்சி, புத்தாக்கம், தொழில்நுட்ப வளர்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் புதிய தொழில்நுட்பங்களைச் சந்தைக்குக் கொண்டு செல்வது உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களுக்கு சிஐஐ இந்த விருதுகளை வழங்கி வருகிறது.

புதுடெல்லியில் நடைபெற்ற சிஐஐ உலகளாவிய தொழில்துறை – கல்வி நிறுவனக் கூட்டாண்மை உச்சி மாநாட்டில், கல்லூரியின் சார்பில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன், கல்லூரி முதல்வர் சௌந்தரராஜன், தொழில்துறைத் தொடர்பு மேலாளர் ரவீன் மற்றும் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் மக்கள் தொடர்புப் பொது மேலாளர் பிரகதீஸ்வரன் ஆகியோர் விருதைப் பெற்றனர்.

தொழில்துறையுடன் இணைந்து ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது, புத்தாக்க முயற்சிகள், ஆலோசனைச் சேவைகள், தொழில்துறை சார்ந்த சிறப்பு மையங்களை உருவாக்குவது, ஆராய்ச்சியில் முதலீடு செய்வது, பேராசிரியர்களின் பங்களிப்பை அதிகரிப்பது மற்றும் நீண்டகால தொழில்துறை உறவுகளைப் பேணுவது போன்ற கல்லூரியின் செயல்பாடுகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

விருதினை இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர் அமித் கோசைன், சிஐஐ தலைவர் விபின் சோந்தி, விஞ்ஞானி சந்திரிகா கௌசிக் மற்றும் சிஐஐ செயல் இயக்குநர் ஆஷிஷ் மோகன் ஆகியோர் வழங்கினர்.