கோவை மாநகரில் நாளை (24.11.26) முதல் இந்த வார இறுதி வரை மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கோவையை சேர்ந்த வானிலை ஆய்வாளர் சுஜய் தெரிவித்ததாவது :-
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வீசும் ஈரப்பதம் மிக்க கிழக்குத் திசைக் காற்றின் காரணமாக நாளை முதல் இந்த வார இறுதி வரை மழை பெய்யவுள்ளது.
இந்த மழை நீண்ட நேரத்திற்குத் தொடர்ந்து பெய்யாமல், குறுகிய நேரத்தில் பலத்த மழையாகப் பெய்யக்கூடும். இதனால் கடந்த அக்டோபர் மாதம் ஏற்பட்டது போன்ற பெரிய அளவிலான வெள்ள பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை.
மழை பெய்யும்போது 10 முதல் 15 நிமிடங்களுக்குச் சாலைகளில் நீர் தேங்கினாலும், மழை நின்றவுடன் அது விரைவாக வடிந்துவிடும். குறிப்பாகப் பிற்பகலுக்குப் பிறகும், இரவு நேரங்களிலும் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது.
எனவே, மாலை நேரங்களில் அலுவலகம் முடிந்து வீடு திரும்புபவர்கள் மற்றும் பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் ரெயின்கோட் அல்லது குடையை எடுத்துச் செல்வது நல்லது.

