தீபாவளி பண்டிகை முடிந்து விட்டது. விடுமுறைக்கு பலரும் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பி விட்டனர். அடுத்து பொங்கல் பண்டிகை வர உள்ளது. பொங்கலுக்கும் தொடர் விடுமுறை உள்ளதால் மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிடுவது வழக்கம்.
தமிழர்களின் முக்கியப் பண்டிகையான தைப்பொங்கல் வரும் ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் வேலைக்காகத் தங்கியுள்ள தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிடுவார்கள்.
பொங்கல் பண்டிகையின்போது மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட பாரம்பரிய வீர விளையாட்டுகள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்தப் போட்டிகளைக் காணவும், குடும்பத்தினருடன் பண்டிகையைக் கொண்டாடவும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்வார்கள்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரயில்வே நிர்வாகத்தின் தற்போதைய நடைமுறைப்படி, பயணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய முடியும்.
அதன்படி, ஜனவரி 12-ம் தேதி பயணம் மேற்கொள்வோருக்கான முன்பதிவு நவம்பர் 13-ம் தேதியும், ஜனவரி 13-ம் தேதி பயணம் செய்வோருக்கான முன்பதிவு நவம்பர் 14-ம் தேதியும் தொடங்குகிறது. போகிப் பண்டிகையான ஜனவரி 14-ம் தேதி பயணம் செய்ய நவம்பர் 15-ம் தேதியும், தைப்பொங்கல் நாளான ஜனவரி 15-ம் தேதி பயணம் செய்ய நவம்பர் 16-ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
அதேபோல், பொங்கல் பண்டிகையைச் சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு மீண்டும் பணியிடங்களுக்குத் திரும்புவோருக்கான முன்பதிவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 17-ம் தேதி பயணம் செய்ய நவம்பர் 18-ம் தேதியும், ஜனவரி 18-ம் தேதி பயணம் செய்ய நவம்பர் 19-ம் தேதியும், ஜனவரி 19-ம் தேதி பயணம் செய்ய நவம்பர் 20-ம் தேதியும் முன்பதிவு தொடங்குகிறது.
ஒவ்வோர் ஆண்டும் பொங்கல், தீபாவளி போன்ற முக்கியப் பண்டிகைகளின்போது ரயில் டிக்கெட்டுகளுக்குக் கடும் கிராக்கி நிலவுகிறது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தீபாவளிப் பண்டிகைக்கான முன்பதிவு தொடங்கியபோது, இணையதளச் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாகப் பலரால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
எனவே, பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு தொடங்கும்போது இதுபோன்ற தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் எனப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
