ஆன்லைன் ஷாப்பிங் இன்று மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. ஆடைகள், மளிகைப் பொருட்கள், விமான டிக்கெட்டுகள், ஹோட்டல் முன்பதிவுகள் என பெரும்பாலான சேவைகளும் தற்போது இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் மூலம் நடைபெறுகின்றன.
ஆனால், இந்த வசதியுடன் சில ஆபத்துகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, ஆன்லைன் தளங்களில் பயன்படுத்தப்படும் ஏமாற்றும் வணிக உத்திகள் காரணமாக இந்திய நுகர்வோர் ஆண்டுதோறும் ரூ.25,000 கோடி முதல் ரூ.28,000 கோடி வரை இழப்பை சந்தித்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
சந்தை ஆராய்ச்சி நிறுவனமான டேட்டம் இன்டெலிஜென்ஸ் வெளியிட்டுள்ள “இந்தியாவின் ஆன்லைன் சந்தைகளில் உள்ள டார்க் பேட்டர்ன்ஸ்” என்ற அறிக்கையில், பல நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து கூடுதல் பணம் வசூலிக்க ‘டார்க் பேட்டர்ன்ஸ்’ எனப்படும் மறைமுக உத்திகளைப் பயன்படுத்துகின்றன என்று கூறப்பட்டுள்ளது.
இந்த உத்திகளில் மறைமுகக் கட்டணங்கள், செக்அவுட் செய்யும் போது திடீரென சேர்க்கப்படும் கூடுதல் கட்டணங்கள், கட்டாயப்படுத்தப்படும் கூடுதல் சேவைகள், போலியான குறுகிய கால சலுகைகள் சந்தாக்கள் போன்றவை அடங்கும். பொதுவாக வாங்கத் தயங்கும் பொருட்கள் அல்லது சேவைகளை வாடிக்கையாளர்கள் வாங்கும்படி தூண்டுவதே இந்த உத்திகளின் நோக்கமாகும்.
அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள சுமார் 304 மில்லியன் ஆன்லைன் ஷாப்பிங் பயனர்களில் 88 சதவீதம் பேர் இந்த டார்க் பேட்டர்ன்ஸின் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், ஒவ்வொரு நுகர்வோரும் மாதந்தோறும் சராசரியாக ரூ.78 முதல் ரூ.87 வரை கூடுதல் செலவைச் சந்திக்கின்றனர். ஆன்லைனில் பொருள் வாங்கும் இறுதிக் கட்டத்தில் கூடுதல் கட்டணங்களை செலுத்துவதாக 63 சதவீத வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் 52 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 63 சதவீதமாக அதிகரித்துள்ளது.
