எர்ணாகுளம்–காரைக்கால் எக்ஸ்பிரஸ் போத்தனூரில் நிற்பதில்லை. இந்த ரயில் இதற்கு முன்னர் போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்று சென்ற ஒன்று தான். இந்த ரயிலும், கோவையிலிருந்து மங்களூர் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம்–பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகிய சேவைகள் போத்தனூரில் நின்று செல்லவேண்டும் என போத்தனூர் ரயில் பயனாளர் சங்கம் சார்பில் இன்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கை மனுவை, கோவை வந்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் சுப்பா ராவ்விடம் இந்த சங்கத்தின் தலைவர் முகமது சாஹிர், பொதுச்செயலாளர் சுப்ரமணியன் தலைமையிலான குழுவினர் நேரில் சமர்ப்பித்தனர்.
இதன் பின்னர் பேசிய போத்தனூர் ரயில் பயனாளர் சங்க பொதுச்செயலாளர் சுப்ரமணியன், தங்களின் கோரிக்கை பற்றி கூறுகையில்:-
சோமனூர்–கோயம்புத்தூர், கோயம்புத்தூர்–சோமனூர் மெமு ரயிலின் நேரத்தை சற்று மாற்றி அமைக்கப்பட வேண்டும். மேலும் நஞ்சுண்டாபுரம் செல்லும் சாலையிலிருந்து ஒரு நுழைவு வாயில் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளோம்.
தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளின் போது சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது குறித்த அறிவிப்புகள் பெரும்பாலும் ஒரு சில நாட்களுக்கு முன்புதான் வெளியிடப்படுகின்றன. இதனால், ரயில்கள் குறித்த தகவல்கள் பயணிகளுக்கு உரிய நேரத்தில் சென்றடைவதில்லை.
இதன் காரணமாக, பயணிகள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எனவே, பண்டிகைக் கால சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்புகளை குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு முன்பே வெளியிட வேண்டும். மேலும் பண்டிகை காலத்திற்கு என நிரந்தரமாக ஒரு அட்டவணையை தயார் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம்.
1921ல் இந்திய சுதந்திரத்திற்காக கேரளாவில் போராடியவர்கள் கைது செய்யப்பட்டு கோவைக்கு ரயிலில் அனுப்பிவைக்கப்பட்டபோது, ரயிலை போத்தனூரில் ஆய்வு செய்தபோது அவர்களில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தெரியவந்தது. அந்த தியாகிகள் நினைவாக ஒரு நினைவு தூண் போத்தனூரில் அமைக்க இடம் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளோம்.
அதே போல கோவை-சேலம் இடையே இயங்கி வந்து நின்றுபோன மெமு ரயில் சேவையும் மீண்டும் வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

