குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்கு பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் கொண்டுவரப்படவுள்ளன. இவற்றில் பல திட்டங்கள் கடந்த திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டவை.

இந்த நிலையில் தற்போது சேலத்தில் இப்படியொரு திட்டத்தை துவங்க கடந்த ஆட்சியில் திட்டமிட்டதை இப்போதும் ஆளும் த.வெ.க. அரசு  செயல்படுத்த முடிவெடுத்துள்ளது.

அதே போல கோவை உள்ளிட்ட பிற இடங்களிலும் இதுபோன்ற திட்டங்கள் வர வாய்ப்புள்ளது. எனவே தமிழகத்தில் குப்பை எரிஉலைகளை அமைக்கும் திட்டத்தை செய்லபடுத்த கூடாது என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விரிவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குப்பை எரிஉலைகளில் உள்ள ஆபத்து

குப்பை எரிஉலைகள் உலகெங்கும் தோல்வியடைந்த திட்டம் ஆகும். உலகின் வளர்ந்த நாடுகள் பலவும் இந்தத் திட்டத்திற்கு தடை விதித்துள்ளன. குப்பை எரிஉலையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து குப்பைகளும் ஒன்றாக எரிக்கப்படும் என்பதால், அதிலிருந்து டையாக்சின், சல்பர் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, பாதரசம், கரியமில வாயு, டையாக்சைடு, ஃபியூரன் உள்ளிட்டவை வெளியாகும்.

காற்றில் மிதக்கும் PM 2.5, PM 10 நச்சுத் துகள்கள், ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் ஆகியவை வெளியாகும். இவற்றில் பல ரசாயனங்கள் சுற்றுச்சூழலுடன் கலந்து அழியாமல் நிலைத்திருக்கக் கூடிய மிகக் கொடிய நச்சுத்தன்மை கொண்டவை; இவை மனித உடலுக்குள் சென்ற பின்னரும் கூட அழியாமல் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானவை.

திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்

இந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்திருந்து தான் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வடசென்னை கொடுங்கையூர், தென்சென்னை பெருங்குடி, செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கம், கோவை வெள்ளலூர் ஆகிய இடங்களில் ஆபத்தான குப்பை எரிஉலை திட்டத்தை அறிவித்து அதற்கான பணிகளை கடந்த ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர்.

சேலத்திற்கு ஆபத்து

சேலம் ஜாகிர் அம்மாபாளையம் குப்பை எரிஉலைத் திட்டம் கூட கடந்த ஆட்சியில் கருவாக்கப்பட்ட திட்டம் தான். இதற்கான திட்டம் வகுக்கப்பட்டது முதல் இடம் அடையாளம் காணப்பட்டு, இறுதி செய்யப்பட்டது வரை அனைத்தும் திமுக ஆட்சியில் தான் இறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், சமீபத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி அவை விதி எண் 110-இன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் விஜய், சேலம் மாநகராட்சியில் ரூ.291 கோடியில் 10 மெகாவாட் திறனுக்கும், நெல்லையில் ரூ.256 கோடியில் 9 மெகாவாட் அளவுக்கும் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் வெள்ளக்கல்பட்டியில் கொங்கு எஸ்.ஆர்.வி பள்ளிக்கு எதிரில் உள்ள அரசுக்கு சொந்தமான 92.49 ஏக்கர் பரப்பளவில் திடக்கழிவு குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது சேலம் மாநகரத்திற்கு பேரழிவை ஏற்படுத்திவிடும்.

நச்சுவாயு போன்றது!

ஹிட்லரின் நாஸி படைகளால் பிடிக்கப்பட்ட யூதர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு, நச்சுவாயு செலுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். தமிழகத்தின் பல இடங்களில் அமைக்கப்படும் குப்பை எரி உலைகளும் அவற்றுக்கு சற்றும் குறைந்தவை அல்ல. எனவே, சேலம் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் குப்பை எரிஉலைகளை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

குப்பைகளுக்கு தீர்வு தான் என்ன?

உச்சநீதிமன்றம் ஆணையிடவாறு, வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து கழிவுகளை ஈரமான குப்பை, உலர்ந்த குப்பை, சுகாதாரக் கழிவுகள், சிறப்புக் கவனம் தேவைப்படும் கழிவுகள் என 4 வகைகளாகப் பிரித்து சேகரிக்கும் சேகரிக்கப்படும் கழிவுகளை மத்திய அரசின் 2026 ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை விதிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.