கோவை விமான நிலையத்தில் வியாழக்கிழமை (செப்டம்பா் 17) தொடங்கி அக்டோபா் 10 வரை யாத்ரி சேவா அபியான் என்ற தலைப்பில் பயணிகள் நலுனுக்கான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக விமான நிலைய இயக்குநா் முகமது ஆரிப் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் விமான பயணிகளின் நலன் காக்கவும், மேம்படுத்தவும் அனைத்து விமான நிலையங்களிலும் ‘யாத்ரி சேவா அபியான்’ என்ற தலைப்பில் பல்வேறு நடவடிக்கைகள் செப்டம்பர் 17தொடங்கி அக்டோபர் 10 வரை நடக்கின்றன.
இதன்படி கோவை விமான நிலையத்திலும் இந்நிகழ்ச்சி தொடங்குகிறது. பயணிகளுக்கு விமான நிலையங்களில் சிறப்பான அனுபவத்தை வழங்கும் நோக்கத்தில் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
குறிப்பாக விமான நிலைய வளாகங்களில் தூய்மை, பாதுகாப்பு, பயணிகளுக்கு பல்வேறு சேவைகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. குறிப்பாக மூத்த குடிமக்கள், பெண்கள், குழந்தைகள், முதல் முறை விமான பயணம் மேற்கொள்பவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு சேவைகள் வழங்கப்படும்.
தொடக்க நாளில் கலை நிகழ்ச்சிகள், பிரதமர் புகைப்படம் கொண்டு அமைக்கப்பட்ட செஃல்பி பூத் கட்டமைப்பில் பயணிகள் நின்று புகைப்படம் எடுத்து கொள்ளுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அதை தொடர்ந்து அக்டோபர் 10-ம் தேதி வரை விமான நிலைய வளாகத்தில் குடிநீர் வசதி, டிஜிட்டல் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் ஆய்வு செய்யப்பட்டு பயணிகள் நலன் காக்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
செப்டம்பர் 27-ம் தேதி உலக சுற்றுலா தினத்தன்று சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று தூய்மை பணிகள், சுகாதாரம் மேம்பாடு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
