கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சியின் பொது நிதியின் மூலம் கட்டப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் இன்று துவக்கி வைத்தார். அதேபோல ரூ.26.90 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளுக்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு அந்த பணிகளையும் அமைச்சர் துவக்கி வைத்தார்.
வார்டு எண்.94க்கு உட்பட்ட சுந்தராபுரம், பதிவாளர் காலனி பகுதியில் மாநகராட்சி ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையம், கல்லுக்குழி வீதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சுகாதார ஆய்வாளர் அலுவலக கட்டடத்தையும் திறந்து வைத்தார்.
வார்டு எண்.96-க்குட்பட்ட சாரதா மில் சாலை, சங்கம் வீதி பகுதியில் ரூ.8.85 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைப்பதற்காகவும், வார்டு எண்.99-க்குட்பட்ட போத்தனூர், அற்புதம் நகர் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூ.9.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்காகவும், வார்டு எண்.85-க்குட்பட்ட கோணவாய்க்கால்பாளையம் பகுதிக்கு பிரதான குழாய் மூலம் கிணற்று நீர் விநியோகம் செய்வதற்காகவும், வார்டு எண்.100-க்குட்பட்ட கணேசபுரம் அம்மன் நகர் பகுதியில் (முத்து மாரியம்மன் கோயில் பின்புறம்) ரூ.8.65 இலட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் கட்டுவதற்காகவும் திட்டமிடப்பட்டுள்ள பணிகளுக்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு, பணிகளை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா அமைச்சருடன் இருந்தனர்.

