தமிழக அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் குறுந்தொழில் வளர்ச்சிக்காக தொழில்துறையினர் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெறாதது ஏமாற்றமளிப்பதாக தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டேக்ட்) தலைவர் மற்றும் கோவை தொழில் துறையினர் கூட்டமைப்பு (போசியா) ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் தெரிவித்தார்.

13. a scaled

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக அரசின் புதிய பட்ஜெட்டில் தொழிற்துறை தொடர்பான சில அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவையாக இருந்தாலும், குறுந்தொழில் துறையினர் எதிர்பார்த்த முக்கிய கோரிக்கைகள் இடம்பெறவில்லை. குறிப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு ரூ.2,145 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை வரவேற்கிறோம்.

மேலும், மின்சாரத் துறையில் மேற்கொள்ளப்பட உள்ள மாற்றங்கள் மற்றும் மேம்பாட்டு திட்டங்களும் தொழில்துறைக்கு பயனளிக்கும் வகையில் இருப்பதாகக் கூறினார்.

அதேநேரத்தில், தொழில்துறையினருக்கு நீண்டகாலமாக சுமையாக இருந்து வரும் நிலைக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு கவனத்தில் கொள்ளவில்லை. இந்தக் கோரிக்கை தொடர்பாக பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது.

தமிழகத்தில் புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தாலும், குறுந்தொழில் நிறுவனங்களுக்கென புதிய தொழிற்பேட்டைகள் அமைப்பதற்கான ஒதுக்கீடு அல்லது அறிவிப்பு இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.

மேலும், மூலப்பொருள் வங்கி அமைத்தல், நிலைக்கட்டண சலுகை, குறுந்தொழில் தொழிற்பூங்காக்கள் உருவாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என தொழில்துறையினர் எதிர்பார்த்த நிலையில் அவை அறிவிக்கப்படாதது குறுந்தொழில் முனைவோருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.