ஏழைளுக்கு அளிக்கும் சிகிச்சை தரம் குறைந்ததாக இருக்கக் கூடாது!
– டாக்டர் ரவி கண்ணன், இயக்குநர், கச்சார் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், அஸ்ஸாம்

கே.எம்.சி.ஹெச் மருத்துவக் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா, டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கலையரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 2020-2026ம் கல்வியாண்டில் படித்த மருத்துவ மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்.

கே.எம்.சி.ஹெச் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் டீன் டாக்டர் ரவிக்குமார் வரவேற்புரை வழங்கினார். கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்ல.ஜி.பழனிசாமி தலைமையுரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கச்சார் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் ரவி கண்ணன் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு சான்றிதழ் வழங்கினார். கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அருண் என். பழனிசாமி, இயக்குநர் டாக்டர் பூரணி பழனிசாமி வாழ்த்துரை வழங்கினர்.

தலைமையுரையில் டாக்டர் நல்ல.ஜி.பழனிசாமி பேசியதாவது: மருத்துவத்துடன் சேவை மனப்பான்மையும் உங்களது மனதில் இருக்க வேண்டும். மருத்துவம் என்பது சிறிய படிப்பில்லை. வாழ்க்கை முழுவதும் படித்துக் கொண்டே இருக்கவேண்டும். ஆண்டுதோறும் மருத்துவம் மாறிக் கொண்டே இருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு அனைத்து துறைகளிலும் வந்துவிட்டது.

எம்.பி.பி.எஸ் உடன் நிறுத்தி விடாமல் அதற்கு அடுத்து என்ன படிக்க வேண்டும் என்பது குறித்து மாணவர்கள் சிந்திக்க வேண்டும். எம்.பி.பி.எஸ் என்பது மருத்துவத்தின் முதல் படி. இன்னும் எவ்வளவோ படிக்க வேண்டியுள்ளது. நோயாளியை ஒரு மருத்துவர் எப்படி கையாளுகிறார், அவருடன் எப்படி பேசுகிறார் என்பது முக்கியம் எனப் பேசினார்.

சிறப்பு விருந்தினர் டாக்டர் ரவி கண்ணன் பேசுகையில்: நான் 1987-ல் எனது மருத்துவப் படிப்பை முடித்தேன். அந்த காலத்திலிருந்து, மருத்துவம் செயல்படும் விதம் முற்றிலும் மாறிவிட்டது. கடந்த காலத்தில் எவ்வளவோ விஷயங்கள் மாறிவிட்டன. இன்று எங்களால் வார்டு சுற்றுகளை இருந்த இடத்திலே மேற்கொள்ள முடிகிறது. நான் சென்னையில் இருந்துகொண்டே, எனது ஒவ்வொரு நோயாளியையும் ஒரு கைபேசி அல்லது கணினியின் மூலம் பார்க்க முடிகிறது.

முன்பு படித்த மருத்துவத்திற்கும், இப்போதுள்ள மருத்துவத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. மருத்துவத்தில் பல நடைமுறைகள் மாறியுள்ளன. தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. செயற்கை நுண்ணறிவு எல்லாவற்றையும் மாற்றிவிடும். ஆனால் மருத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடு ஒருபோதும் மாறாது. மருத்துவம் என்பது மனிதர்கள் சார்ந்தது. ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர், ஜாதி, மதம் என அனைத்தையும் கடந்தது மருத்துவம்.

மருத்துவம் என்பது மனிதர்களைப் பற்றியது, நோய்வாய்ப்பட்ட மனிதர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களைப் பற்றியது. நாம் அவர்களை எவ்வாறு கவனித்துக்கொள்கிறோம் என்பதைப் பற்றியது.

மருத்துவர்களாகிய நீங்கள், நோய்வாய்ப்பட்ட மனிதனையும் அவனது குடும்பத்தையும் மையத்தில் வைத்திருக்கும் வரை, வேறு எதையும் பார்க்கத் தேவையில்லை. நீங்கள் எப்போதும் சிறப்பாகச் செயல்படுவீர்கள். உங்கள் நோயாளிகள் உங்களை மதிப்பார்கள், நேசிப்பார்கள், உங்களை ஒரு தெய்வமாகவே கருதுவார்கள்.

அவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்கள் யாராவது இறந்திருந்தாலும், நீங்கள் அவர்களைக் கவனித்துக் கொண்ட விதத்தைப் பார்த்து, உங்களிடம் மேலும் பலரைச் சிகிச்சைக்காக அழைத்து வருவார்கள். மருத்துவத்தில் இதை இப்படித்தான் செய்ய வேண்டும், அதை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால் இன்று நாம் அந்த நிலையில் இல்லை. இன்று அனைத்தும் சான்றுகளின் அடிப்படையிலானது. எல்லாவற்றிற்கும் அறிவியல் இருக்கிறது, சோதனைகள் இருக்கின்றன, ஆய்வுகள் இருக்கின்றன.

மருத்துவத்தைப் பொறுத்தவரை வாழ்க்கை முழுவதுமே நாம் மாணவர்கள் தான். நாம் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். இன்றைய நவீன காலத்தில் கணினிகள், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் போன்ற தொழில்நுட்பங்கள் உங்களுக்குச் சிறந்த முடிவுகளை எடுக்க உதவும்.

ஆனால், எத்தனை கணினிகள் இருந்தாலும், ஒரு மருத்துவராக நீங்கள்தான் இறுதி முடிவை எடுக்க வேண்டும். உங்களுக்கு மாற்றாக வேறு எதுவும் வர முடியாது. எந்த ஒரு இயந்திரமும், கணினியும், ஏஐ தொழில்நுட்பமும் உங்களை மாற்ற முடியாது.

எனவே, அனைத்து முடிவுகளுக்கும் அறிவியலை அடிப்படையாகக் கொள்ளுங்கள். ஆதாரமற்ற சிகிச்சைகளுக்குச் செல்லாதீர்கள். இவை அனைத்தையும் செய்வதற்கு, நீங்கள் ஒரு குழுவாக இணைந்து பணியாற்ற வேண்டும்.

உங்கள் ஊரில் உள்ள அடுத்த மருத்துவமனையை உங்களது போட்டியாளராகக் கருதாதீர்கள். உங்களுக்கு அடுத்திருக்கும் சக மருத்துவரை உங்கள் போட்டியாளராக நினைக்காதீர்கள், நீங்கள் அனைவரும் இணைந்து பணியாற்றுபவர்கள்.

நம் அனைவருக்கும் இருக்கும் ஒரே நோக்கம் நோய்வாய்ப்பட்ட மனிதன் குணமடைய வேண்டும் என்பதுதான். அதில், உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு மருத்துவரும், உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு மருத்துவமனையும் உங்களின் கூட்டாளியே தவிர போட்டியாளர் அல்ல.

‘நான் எதையாவது செய்து என்னை உயர்த்திக் காட்டுவேன், அடுத்தவரைத் தாழ்த்துவேன்’ என்ற எண்ணத்திற்கு ஒருபோதும் இடம் கொடுக்காதீர்கள். அது ஒருபோதும் உதவாது, அது உங்களுக்கு எந்த நன்மையையும் தராது.

இன்று மருத்துவம் என்பது முன்னெப்போதையும் விட பல்துறை சார்ந்ததாகவும் பல சிறப்புகளைக் கொண்டதாகவும் மாறியுள்ளது. இன்று ஒரு மருத்துவராக, நோயாளிகளைக் குணப்படுத்துவது மருத்துவர்கள் மட்டுமல்ல. உங்களுக்குச் செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், இயற்பியலாளர்கள், அணு மருத்துவம் சார்ந்தவர்கள், மரபியல் வல்லுநர்கள் என அனைவரும் தேவைப்படுகிறார்கள்.

எனவே, உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு துறையும் உங்கள் நோயாளியின் கவனிப்பில் பங்களிக்க முடியும். ஒரு மருத்துவராக அல்லது ஒரு நிறுவனமாக, உங்களைச் சுற்றியுள்ள அனைவரின் எண்ணங்களையும் ஆற்றலையும் எவ்வாறு ஒருங்கிணைத்து உங்கள் நோயாளிகளைச் சிறந்த முறையில் குணப்படுத்தலாம் என்று சிந்தியுங்கள்.

அதோடு, உங்கள் குழுக்கள் இன்னொவேடிவ் ஆக இருக்க வேண்டும். ஏழை மக்களுக்கு அளிக்கும் சிகிச்சை தரம் குறைந்ததாக இருக்கக் கூடாது. உகந்த சிகிச்சையை விடக் குறைவான எதைக் கொடுத்தாலும் அது துரோகமாகும். அப்படி செய்தால் நான் ஒரு மருத்துவர் என்று அழைக்கப்படத் தகுதியற்றவன் ஆவேன்.
யார் வைத்தியத்திற்கு வந்தாலும் சிறந்த சிகிச்சையை அளிப்பவரே சிறந்த மருத்துவர். மருத்துவத் துறையில் புதுமை மிகவும் முக்கியமானது. நீங்கள் எதைச் செய்தாலும் அந்த அடிப்படை மனிதநேயத்தை மட்டும் எப்போதும் இழந்துவிடக் கூடாது.

நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவே நாம் இங்கு இருக்கிறோம், அதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது எனப் பேசினார்.