கோவை இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான்-நிக்கோபார் என்சிசி இயக்குநரக அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
கல்லூரியின் ஆர்ட்டிலரி பேட்டரி என்சிசி பிரிவைச் சேர்ந்த ரசாயனப் பொறியியல் 4ம் ஆண்டு மாணவர் நவீன், திருச்செங்கோட்டில் உள்ள கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் ஜூலை 15 முதல் 24-ம் தேதி வரை நடைபெற்ற இன்டர் குரூப் கம்பிட்டிஷன் சர்வீஸ் சூட்டிங் போட்டியில் பங்கேற்றார்.
இதில் 2-வது இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அவரது செயல்பாடு அணியின் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வதற்கும் முக்கிய பங்காற்றியது.
இந்தச் சாதனையை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான்-நிக்கோபார் என்சிசி இயக்குநரகத்தின் துணை இயக்குநர், ஜெனரல் கமடோர் சுதீப் பாராட்டினார்.
