கோவை மாநகரின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ள சரவணம்பட்டி சந்திப்பில், தரைமட்ட சாலை மேம்பாட்டுப் பணிகளுக்குப் பதிலாக மேம்பாலம் அமைப்பதே நிரந்தரத் தீர்வு என்று கோயம்புத்தூர் கன்சூமர் காஸ் அமைப்பு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் கன்சூமர் காஸ் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை-சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சரவணம்பட்டி சந்திப்பு, ஐ.டி. நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதி என்பதால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த சந்திப்பு விபத்துகள் அதிகம் நடைபெறும் ‘பிளாக் ஸ்பாட்’ பகுதியாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனால், 2021-22 ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ.80.48 கோடி மதிப்பில் மேம்பாலம் மற்றும் சந்திப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கோவை மெட்ரோ ரயில் திட்டம் இந்த சாலை வழியாக வரவுள்ளதாகக் கூறி, மேம்பாலத் திட்டம் கைவிடப்பட்டது. அதற்குப் பதிலாக, சுமார் ரூ.12 கோடி மதிப்பில் தரைமட்ட சந்திப்பை மட்டும் மேம்படுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டது. இந்த முடிவு எடுக்கும்போது மாவட்ட சாலை பாதுகாப்புக் குழு, மக்கள் பிரதிநிதிகள் அல்லது பொதுமக்களிடம் ஆலோசனை நடத்தப்படவில்லை.

இதற்கிடையில், மேம்பாலத் திட்டத்தை கைவிட காரணமாகக் கூறப்பட்ட கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பரிலும், மாநில அரசு திருத்தி அனுப்பிய புதிய முன்மொழிவை தற்போதும் (ஜூலை) நிராகரித்துள்ளது. எனவே, மேம்பாலத் திட்டத்தை கைவிட காரணமாக இருந்த சூழல் தற்போது இல்லாத நிலையில், பழைய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். கோவை மாவட்ட சாலை பாதுகாப்புக் குழுவும், சரவணம்பட்டி சந்திப்பில் மேம்பாலம் அமைக்க பரிந்துரைத்துள்ளது.

ஏற்கனவே, துடியலூர் சந்திப்பில் மேற்கொள்ளப்பட்ட தரைமட்ட சந்திப்பு மேம்பாட்டுப் பணிகள் போக்குவரத்து நெரிசலை முழுமையாகக் குறைக்கவில்லை. அதே நிலை சரவணம்பட்டியிலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, தற்போது ஒப்புதல் பெற்றுள்ள தரைமட்ட சந்திப்பு மேம்பாட்டுத் திட்டத்தை கைவிட்டு, ஏற்கெனவே மத்திய அரசு ஒப்புதல் அளித்த மேம்பாலத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 சரவணம்பட்டியில் ஏன் மேம்பாலம் தேவை?

சரவணம்பட்டி, கோவையின் வேகமாக வளர்ந்து வரும் ஐ.டி. மற்றும் தொழில் மையங்களில் ஒன்றாகும். ஐ.டி. பூங்காக்கள், தனியார் கல்லூரிகள் மற்றும் பல ஆயிரம் குடியிருப்புகள் இந்தப் பகுதியைச் சுற்றி அமைந்துள்ளதால், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்தச் சந்திப்பை பயன்படுத்துகின்றன. எந்நேரமும் வாகன போக்குவரத்து இப்பகுதியில் உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நீண்டகால உள்கட்டமைப்பு தீர்வாக மேம்பாலம் அவசியம் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறது.