2011 விரிவாக்கத்திற்கு முன்னர் கோவை மாநகராட்சியில் இருந்த பழைய 60 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரம் இடைநில்லா குடிநீர் விநியோகிக்கும் திட்டம் கொண்டுவர அப்போதைய அதிமுக அரசு முடிவு செய்தது. 2018 இறுதியில் இதற்கான பணிகள் துவங்கின. கோவிட்-19 போன்ற சில தவிர்க்கமுடியாத காரணத்தால் தாமதம் ஆன இந்த பணிகள், இப்போது வரை நடைபெற்று வருகிறது.

வடக்கு மண்டலத்தில் 11 வார்டுகள் (வார்டு எண். 3, 12, 18, 19, 20, 25, 26, 27, 28, 29, 30); தெற்கு மண்டலத்தில் 6 வார்டுகள் (வார்டு எண். 76, 77, 78, 79, 86, 87), மேற்கு மண்டலத்தில் 10 வார்டுகள் ( வார்டு எண் . 41, 42, 43, 44, 45, 71, 72, 73,74, 75), மத்திய மண்டலத்தில் 20 வார்டுகள் (வார்டு எண். 31, 32, 46, 47, 48, 49, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 80, 81, 82, 83, 84)  மற்றும் கிழக்கு மண்டலத்தில் 13 வார்டுகள் (வார்டு எண். 24, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61).

தற்போது இந்த  24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகள் 98% முடிக்கப்பட்டுள்ளது என கோவை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் குழாய் பதிக்கும் பணிகள் மட்டும் நிலுவையில் உள்ளன.

அதன் படி, மேட்டுப்பாளையம் சாலையில் முருகன் மில் முதல் ஐ.டி.ஐ. வரையிலும், திருச்சி சாலையில் ஒண்டிப்புதூர் முதல் ஒப்பணக்காரவீதி போத்தீஸ் சந்திப்பு வரையிலும், அவிநாசி சாலையில் பி.எஸ்.ஜி கலைக்கல்லூரி முதல் தண்டு மாரியம்மன் கோயில் வரையிலும் குடிநீர் விநியோக குழாய் பதிக்கும் பணிகள் 24.07.2026 முதல் ஆரம்பிக்கப்பட்டு 31.8.2026க்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இப்பணிகள் நடைபெறும்போது, அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பொதுமக்களை மாநகராட்சி ஆணையர்கட்டா ரவி தேஜா கேட்டுக்கொண்டுள்ளார்.