ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ரோட்டரி கோவை மாவட்ட ஆளுநராக பொறுப்பேற்றுள்ள கல்லுாரியின் முன்னாள் மாணவர் மாருதிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசுகையில்: கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருவர், தனது கல்விப் பயணத்தைத் தொடர்ந்து சமூக சேவை, தலைமைத்துவம் மற்றும் பொதுநலப் பணிகளில் சிறந்து விளங்கி, உயரிய தலைமைப் பொறுப்பை அடைந்திருப்பது பெருமைக்குரியது.
கல்வி என்பது ஒரு பட்டத்துடன் முடிவடைவதல்ல; அது சமூகத்திற்கான பங்களிப்பாகவும், தலைமைத்துவமாகவும், மனிதநேயச் சேவையாகவும் விரிவடைய வேண்டும் என்பதற்கு மாருதி அவர்களின் பயணம் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்றார்.
கல்லூரியின் மாணவர் மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கீதா, துணைத் தலைவர் ஹேமாஸ்ரீ, செயலாளர் காவியா, துணை செயலாளர் ருத்ர சர்மா ஆகியோருக்கு கல்லுாரியின் முதல்வர் சிவக்குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதேபோல் கல்லூரியில் செயல்படும் 39 கிளப்புகளின் மாணவத் தலைவர்கள், செயலாளர்கள் பதவியேற்றனர்.
நிகழ்வில் கல்லுாரி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் செந்தில்குமார், முன்னாள் மாணவர் சங்கச் செயலாளர் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
