மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027ன் முதல்கட்ட பணியான வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு கோவை மாவட்டத்தில் இம்மாதம் நடைபெறுகிறது.

இதில் சுயமாக விவரங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதை https://se.census.gov.in எனும் இணையத்தளம் மூலம் வரும் 17.7.26 முதல் 31.7.26 வரை பொதுமக்கள் பதிவு செய்யமுடியும்.

இல்லையேல் 1.8.26 முதல் 30.8.26 வரை கணக்கெடுப்பாளர்கள் மக்களின் இல்லங்களுக்கே வந்து விவரங்களை சேகரிப்பார்கள். இந்த பணிகளின் போது பொது மக்களிடம் கேட்கப்படும் 33 கேள்விகள் என்ன என்பதை கோவை மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) அலுவலகத்தில் விவரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பிரதானமாக வீடு எப்படிப்பட்டது (தரை, கூரையின் பிரதான கட்டுமான பொருள் என்ன?), வீட்டில் சாதாரணமாக எத்தனை பேர் வசிப்பார்கள்;  குடிநீருக்கான பிரதான ஆதாரம், விளக்கு ஒளிக்கான பிரதான ஆதாரம், கழிப்பிட வசதி, கழிவுநீர் வெளியேற்ற இணைப்பு, சமையலறை வசதி, எல்பிஜி இணைப்பு-சமையலுக்கு பயன்படுத்தும் பிரதான எரிபொருள் என்ன? வாகனங்கள் (மிதிவண்டி, ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், கார், ஜீப் வேன்), வானொலி, தொலைக்காட்சி மற்றும் பிற தொலைத்தொடர்பு வசதிகள் (இணையதள வசதி, மடிக்கணினி, தொலைபேசி, கைபேசி, ஸ்மார்ட்போன்) போன்ற கேள்விகள் இடம்பெறும்.

இந்த பணிகள் முடிந்த பின்னர் அடுத்த ஆண்டு (தோராயமாக 2027 பிப்ரவரி) விரிவான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும். இதில் தான் விரிவாக நாட்டில் 2027ல் எத்தனை பேர் குடிமக்களக்காக உள்ளனர் என்ற விவரம் பட்டியலிடப்படும்.