கோவையில் ஏழாவது வானவில் சுயமரியாதை பேரணி ஞாயிறன்று நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் நடைபெற்ற பேரணியில் மூன்றாம் பாலினத்தவர்கள், ஒருபால் ஈர்ப்பாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்தவர்கள் தங்களுக்கு பிடித்த வண்ண உடைகளை அணிந்து அலங்கரித்துக் கொண்டனர். பேரணியில் “என் வாழ்க்கை என் உடல் என் காதல், என் உடலை வன்புணர்வு செய்தாலும் உண்டாகும் வலி ஒன்றுதான்” உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி, வண்ண பலூன்களை கையில் ஏந்தி வானவில் நிறத்தில் நீளமான துணியை ஏந்திய படி பேரணி மேற்கொண்டனர்.
பேரணியில் பங்கேற்றவர்கள் கூறுகையில்: ரேஸ் கோர்ஸில் வழக்கமாக இந்த பேரணி நடைபெறும். ஆனால் அங்கு பாதுகாப்பு இல்லை என்று காரணம் கருதி அனுமதி அளிக்கப்படவில்லை. திருநர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும். தங்களுக்கு என சொந்த வீடுகளை அரசாங்கம் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.
திருநர் மக்களுக்கு மட்டும் திருமணம் செய்துகொள்வதற்கு உரிமை கிடைத்துள்ளது. அந்த உரிமை ஒருபால் ஈர்ப்பாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். மேலும் பெற்றோர்கள் எங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அரசாங்கம் தங்களை மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருப்பவர்கள் போல் பார்க்கிறது. ஆனால் தற்போது சமூகத்தில் நாங்களும் அதிகமாக இருக்கிறோம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த பேரணியை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.
