கோவையை சேர்ந்தவர் சங்கீத் (19). இவர் மேட்டுப்பாளையம் சாலை, ராக்கிபாளையத்தில் அவரது தந்தை ராஜ்குமார், தாய் சபிதா அவர்களுடன் வசித்துவந்தார்.

கடந்த சனிக்கிழமை (16.05.2026) நள்ளிரவு 1 மணிக்கு தொப்பம்பட்டி அருகில் இருசக்கர வாகனத்தில் சங்கீத் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார்.

உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை, அவிநாசி ரோடு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் கடந்த நேற்று அவர் மூளைச் சாவடைந்தார். இதைத்தொடர்ந்து அவரின் பெற்றோர் சங்கீத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய வந்தனர். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதி மற்றும் வழிகாட்டுதலுடன் அவரது இருதயம், நுரையீரல், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகியவை தானமாக பெறப்பட்டது.

சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கும், இருதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.

கே.எம்.சி.ஹெச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுந்த நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பிவைத்தனர்

இது குறித்து கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர் உடல் உறுப்பு தானம் வழங்கிய திரு.சங்கீத் குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.