சத்குருவின் பார்வையில் கிருஷ்ணரின் பன்முகப் பரிமாணங்களை விளக்கும் ‘கிருஷ்ண லீலா’ நூலின் அறிமுக விழா ஞாயிறன்று மதுரையில் நடைபெற்றது.

விழாவில் வேதபிரியாநந்தாஜி மகாராஜ், அழகர்கோவில் அர்ச்சகர் சுந்தர நாராயணன் பட்டர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இவர்களுடன் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன், பிரபல எழுத்தாளர் கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா மற்றும் பேராசிரியர் குருஞானாம்பிகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று நூல் குறித்து சிறப்புரையாற்றினர்.

ராம ஸ்ரீநிவாசன் பேசுகையில், இந்தப் புத்தகத்திற்கு சத்குரு லீலா என்று பெயரிட்டு இருக்கிறார்கள். ஆனால் நானாக இருந்தால் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று பெயரிட்டு இருப்பேன். கிருஷணனின் வாழ்க்கை அது போன்றதே. அவர் பாரம்பரிய மரபுகளை உடைத்தவர்.

வாழ்க்கை என்பது போராட்டம் இல்லை, அது ஒரு விளையாட்டு என்பதை இந்தப் புத்தகத்தை படிக்கும் போது நமக்குப் புரியும். நம் கிராமங்களில் இதனை கவனிக்க முடியும், பெரியம்மை போன்ற நோய் தொற்றுகளை கூட ‘அம்மை விளையாடி’ இருக்கிறது என்றும் அதனை கடவுள் போன்றும் பாவிக்கும் ஒரு மனநிலை உண்டு. இந்த மண்ணுக்கே உரிய பண்பாடு இதுவாகும் எனப் பேசினார்.

ஈஷா யோக மையத்தில் கடந்த 2005-ம் ஆண்டு, கிருஷ்ணரின் வாழ்வை மையமாக வைத்து லீலா என்ற நிகழ்ச்சியில் கிருஷ்ணரின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து சத்குரு ஆற்றிய உரைகளை, பிரபல எழுத்தாளர் ‘சுபா’ தமிழில் எழுத்தாக்கம் செய்தார்.

இது ‘ஈஷா காட்டுப்பூ’ மாத இதழில் 150-க்கும் மேற்பட்ட மாதங்கள் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அந்தத் தொடர் தற்போது புத்தக வடிவம் பெற்றுள்ளது. ஈஷா லைஃப் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தின் முதல் பாகம் தற்போது திருச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.