ஒரு காலத்தில் தண்ணீரை சுமந்து சென்ற பல நீர் நிலைகள் இன்று பலரின் தவறால் சாக்கடையாக மாறியுள்ளன. இதுபோன்ற ஒரு நீர் நிலையை உங்களால் உடனே சொல்ல முடியுமா? என்றால் பலரும் கூவம் ஆறு என கூறுவோம்.

ஆனால் நமக்கு தெரிந்தும் தெரியாமலும் பல கூவம் ஆறுகள் உருவாக நாம் காரணமாக மைந்துவருகிறோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டிய நேரம் இது.

கூவத்தை விடுங்க, கோவைக்கு வருவோம்…

கோவை மாநகரத்தின் முக்கிய பகுதிகளில் ஒன்று பீளமேடு. இதில் உள்ள ஒரு சிறு பகுதி காந்திமாநகர். இங்கு ஒரு ஓடை உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. ஆனால் இந்த வழியாக ஒரு கழிவுநீர் கால்வாய் செல்கிறது தெரியுமா என்றால் அப்பகுதியில் வசிக்கும் பலரும் அதை உடனே கட்டிவிடுவார்கள்.

காந்திமா நகர் ஓடை பீளமேடு பகுதியில் உள்ள காந்திமா நகர் காவல் நிலையம் அருகே துவங்கி ‘ஃபன் மால்’ அருகே அவினாசி சாலையைக் கடந்து, ‘ஜி.வி. ரெசிடென்சி’ வழியாகப் பாய்ந்து, ‘உழவர் சந்தை’ அருகே திருச்சி சாலையைக் கடந்து, இறுதியில் இருகூர் பகுதியில் உள்ள ஒரு கால்வாயுடன் இணைகிறது.

இந்த ஓடையின் மொத்த நீளம் 13 கி.மீ. தினசரி 21 மில்லியன் லிட்டர் அளவிற்கான கழிவுநீரை இந்த ஓடை சுமந்து செல்கிறது. இது அருகிலுள்ள பகுதிகளிலும். மக்கள் வசிக்கும் பகுதியை இந்த ஓடை கடக்கும் போது கடும் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

மீட்டெடுக்க பெருமுயற்சி!

இந்த நிலையில், நீர் மேலாண்மை மற்றும் சுற்றுசூழல் பராமரிப்பு பணிகளை கோவை உள்ளிட்ட மேற்கு தமிழக பகுதிகளில் மிக சிறப்பாக செய்துவரும் சிறுதுளி அமைப்பு இந்த ஓடையை மீட்டெடுக்க முயற்சி எடுத்துள்ளது. சமீபத்தில் கோவையில் இயங்கும் பிரபல பி.எஸ்.ஜி. குழுமத்தின் ஆதரவுடன், கோவை மாநகராட்சியின் வழிகாட்டுதலுடன் காந்தி மாநகர் ஓடையை புதுப்பிக்கும் பணியை சிறுதுளி துவக்கியது.

முதல் கட்டமாக காந்திமாநகர் காவல் நிலையம் அருகே துவங்கி சவுரியபாளையம் சாலை வரை 3.6 கி.மீருக்கு ஓடைப்பகுதியை சுத்தப்படுத்தி, தூர்வாரி, ஓடைக்கரையை பலப்படுத்தும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இதன் பின்னர் அவிநாசி சாலை முதல் சவுரியபாளையம் சாலை வரை 1.3 கி.மீருக்கு வேலி அமைத்து திடக்கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஓடைக்கரையின் இருபுற சரிவுகளில் வெட்டிவேர் செடிகள் நடவும் அதன் அருகே உள்நாட்டு மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஓடைக்குள் பாயும் கழிவுநீரை, சில அறிவியல்பூர்வமான முறைகளைப் பயன்படுத்தி சுத்திகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கண்டறிந்ததும், காணவேண்டியதும்

காந்திமா நகர் ஓடையில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும்போது, பெருமளவில் பயன்படுத்தி தூக்கி வீசப்பட்ட படுக்கை, துணிகள் போன்ற பொருட்கள் ஓடைக்குள் கொட்டப்பட்டிருந்தது கண்டறியப்பட்டதாக சிறுதுளி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
wasteremov scaled
இதுபோன்று ஓடைகள், குட்டைகளில் கழிவுகளை கொட்டுவது, சமுதாயத்தில் பொது பொறுப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆகியவற்றை மேலும் அதிகரிக்க வேண்டிய அவசியத்தை காட்டுகிறது என சிறுதுளி அமைப்பு கூறியுள்ளது.

நமது நீர்நிலைகளை பாதுகாப்பது, ஒவ்வொரு தனிநபரின் பொறுப்புணர்வான செயல்களிலிருந்தே தொடங்குகிறது. ஆனால் பெரும்பாலும் குப்பைகளை பொதுவெளியில் வீசிவிட்டு போகும் வழக்கம் நமது மக்களிடையே தொடருகிறது வருத்தமளிக்கிறது.

என்னதான் கோவை மாநகராட்சி பல இடங்களில் கண்காணிப்பு கேமரா வைத்தாலும், குப்பைகளை தரம்பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், மக்களாய் பார்த்து திருந்தாவிட்டால், கோவையை காப்பாற்ற முடியாது என்பதே நிஜம்.
மக்கள் தான் மனம் மாற வேண்டும்…