கோவை மாநகரில் சாலை விபத்துகள் அதிகரித்து வருவதால், விபத்து அபாயம் அதிகமுள்ள ‘ஹாட் ஸ்பாட்’ பகுதிகளின் எண்ணிக்கை 35ல் இருந்து 69 ஆக உயர்ந்துள்ளது என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகன விபத்துகள், அதிவேகத்தில் வாகனம் ஓட்டுதல் மற்றும் சிக்னலை மதிக்காமல் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இரவு நேரங்களில் விபத்துகள் அதிகமாக பதிவாகும் பகுதிகளாக அவிநாசி சாலை, திருச்சி சாலை மற்றும் மேட்டுப்பாளையம் சாலை அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதையடுத்து, இந்த சாலைகளில் இரவு ரோந்து பணிகள் மற்றும் திடீர் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தவும், விபத்துகளை குறைக்கவும் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒரே இடத்தில் மூன்று உயிரிழப்பு விபத்துகள் அல்லது 10 உயிரிழப்பில்லா விபத்துகள் பதிவானால், அந்த பகுதி ‘ஹாட் ஸ்பாட்’ ஆக அறிவிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில், தற்போது மாநகரில் 69 ஹாட் ஸ்பாட் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவிநாசி ரோட்டில் மட்டும் ஏழு ஹாட் ஸ்பாட்கள் உள்ளதாக போக்குவரத்து போலீசார் கூறுகின்றனர்.
மேலும், இந்த பகுதிகளில் விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் சாலை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிவேக ஓட்டத்தை தவிர்த்து, பாதுகாப்பான வேகத்தில் பயணித்தால் பெரும்பாலான விபத்துகளை தவிர்க்க முடியும் என்றும் போலீசார் அறிவுறுத்தினர்.

