கோடை விடுமுறையை முன்னிட்டு, நாடு முழுவதும் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க ரயில்வே துறை 18,262 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் தெரிவித்ததாவது: கோடை விடுமுறையையொட்டி, நாட்டில் உள்ள 18 ரயில்வே மண்டலங்கள் மூலம், ஜூலை 15 வரை 18,262 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதில் ஏற்கனவே 40 முதல் 50 சதவீத ரயில்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே மண்டலத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள 72 சிறப்பு ரயில்களில், இதுவரை 38 ரயில்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு அவை இயக்கப்படுகின்றன. பெரும்பாலான ரயில்களில் முன்பதிவு முழுமையாக நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள ரயில்கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு இயக்கப்பட உள்ளன.
மேலும், பயணிகள் வசதிக்காக, இயங்கும் விரைவு ரயில்களில் கூடுதல் முன்பதிவு பெட்டிகள், முன்பதிவு இல்லாத பெட்டிகள் மற்றும் ஏசி பெட்டிகளும் இணைக்கப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
