கோவையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவருடன் பிரச்சார வாகனத்தில், முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான எஸ்.பி.வேலுமணி உடனிருந்தார்.
கோவை வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த பிரசாரத்தில், கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
பிரச்சார கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்: அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் குரல் மீண்டும் சட்டசபையில் ஒலிக்க வேண்டும். கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசன் தற்போது உடல்நலக்குறைவால் சிகிச்சையில் உள்ளார். இருப்பினும், மக்களை விரைவில் நேரில் சந்திப்பேன் என அவர் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் உங்கள் குரலாக செயல்பட்டவர் என்பதால், அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றார்.
மேலும் அவர் பேசும் போது, திமுக ஆட்சி மற்றும் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்து பேசினார். கரூரில் போட்டியிடாமல் ஏன் தொகுதி மாற்றி நிற்கிறார்? என்று கேள்வி எழுப்பினார். கோவை செல்வம் கொழிக்கும் மாவட்டமாக இருப்பதால் அதனை குறிவைத்து அரசியல் செய்யப்படுகிறது என குற்றம்சாட்டினார். தெற்கு தொகுதி மக்கள் விழிப்புடன் இருந்தால் தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
திமுக ஆட்சியில் மின்சார கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆட்சி மாறினால் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நடுநிலையற்ற அதிகாரிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பேசும்போது, இந்த மசோதாவால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய அரசு தெளிவாக தெரிவித்துள்ளது. இருந்தும் அரசியல் காரணங்களுக்காக திமுக கருப்புக்கொடி போராட்டம் நடத்துகிறது. மேலும், மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தடுக்க திமுக முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
முதலமைச்சருக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. போராட்டம் நடத்தி மத்திய அரசை குற்றம் சாட்டும் நாடகம் நடத்தப்படுகின்றது. மத்திய அரசு மக்கள் நலனுக்காக நல்ல செயல்களை செய்து வருகிறது. முதலமைச்சர் இரட்டை வேடத்தில் செயல்படுகிறார் என குற்றம்சாட்டினார்.
திமுக மற்றும் கூட்டணி எம்.பி.,க்கள் டெல்லியில் மக்களுக்காக குரல் கொடுக்காமல் நேரத்தை வீணடிக்கின்றனர். நீட் தேர்வை திமுக, காங்கிரஸ் கொண்டு வந்தது. தற்போது அதைப்பற்றி ஏன் குரல் கொடுக்கவில்லை. 39 எம்.பி.,க்கள் மக்களுக்காக என்ன செய்கிறார்கள் என்று விமர்சித்தார்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. கஞ்சா போதை அதிகரித்து சிறுமிகள், பெண்கள் மட்டுமின்றி முதியவர்களும் பாதிக்கப்படுகின்றனர். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மூன்று மாதங்களில் கஞ்சா முழுமையாக ஒழிக்கப்படும்.
கோவை மெட்ரோ திட்டம், விமான நிலைய விரிவாக்கம் அதிமுக ஆட்சி வந்தவுடன் இத்திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும். மேலும், கோவைக்கு அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டார். வெள்ளலூர் பேருந்து நிலையம் மீண்டும் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் அறிவித்தார்.
மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். திமுக ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும். அதிமுக ஆட்சி மீண்டும் அமையும். இவ்வாறு அவர் பேசினார்.
