விழுப்புரம் மாவட்டம், புதுச்சேரி – திண்டிவனம் நெடுங்சாலையில், பஞ்சவடி திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு வலம்புரி மஹா கணபதி, பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீவாரி வேங்கடாஜலபதி மற்றும் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்கள் அமைந்துள்ளன.
இந்நிலையில், பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 15ம் தேதியில் இருந்து ஏழாம் கால பூஜை நடந்தன. விழாவினை முன்னிட்டு காலை மாலை இரு வேளைகளிலும் லட்சார்ச்சனை நடந்தது.
அனுமன் ஜெயந்தி விழாவில் விஸ்வரூப தரிசனம், கோ பூஜை, தனுர் மாத பூஜைகள், யாக சாலையில் ஏழாம் கால பூஜை, 36 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு, 2,000 லிட்டர் பாலபிஷேகம் நடைபெற்றது. அலங்காரத்துக்கு பின், ஆஞ்சநேயருக்கு 130 கிலோ எடை கொண்ட ஏலக்காய் மாலை சாற்றப்பட்டது. தெய்வீக இன்னிசைக் கச்சேரி, மஹா சிறப்பு அன்னதானம், ஸ்ரீ சீதா கல்யாணம் நடைபெற்றது.
