கோவையில் உள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்தில் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நூலகங்களிலும் புத்தகங்களின் இருப்பு மற்றும் உண்மைத்தன்மையை சரிபார்க்க உத்தரவிடப்பட்டது.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாவட்ட மைய நூலகம் செயல்பட்டு வருகிறது. இதுதவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெரிய நூலகங்கள் மற்றும் கிளை நூலகங்கள் என மொத்தம்195 முழுநேர நூலகங்களும், 40 பகுதிநேர நூலகங்களும் செயல்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள 195 முழுநேர நூலகங்களிலும் அந்தந்த நூலக அதிகாரிகள் புத்தகங்களின் இருப்பு மற்றும் அவற்றின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த ஆய்வில், மொத்தம் 3,808 போலி புத்தகங்கள் கண்டறியப்பட்டு நூலகங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெரியார் அறிவுலகம் நூலக முறைகேடு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் ஆயிரக்கணக்கான போலி புத்தகங்கள் அகற்றப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
