வாட்ஸ்அப்பில் நமக்கு நூற்றுக்கணக்கான தொடர்புகள் இருக்கலாம். இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான பின்தொடர்பவர்கள் இருக்கலாம். ஆனால் மனம் விட்டு பேச ஒருவராவது இருக்கிறார்களா? என்றால், இல்லை என்ற பதில் பலரிடமிருந்தும் வரலாம்.
இந்த தனிமை தான் உலகம் முழுக்க பல கோடி ரூபாய் வணிகமாக மாறி வருகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? தனிமை என்பது பெரும்பாலும் முதியவர்களின் பிரச்சினையாகக் கருதப்பட்ட நிலையில், இன்று நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. குறிப்பாக 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், “என்னிடம் பேச யாரும் இல்லை” என்ற உணர்வோடு சக மனிதர்களிடம் பேசுவதை தவிர்க்கின்றனர்.
இதற்கு பதிலாக காலை முதல் இரவு வரை ஏஐ சாட்பாட்களிடம் பேசத் தொடங்கியுள்ளனர். பலருக்கு ஏஐ ஒரு நண்பராகவும், துணையாகவும், மனம் திறந்து பேசும் நபராகவும் மாறி வருகிறது.
இந்த ட்ரண்டை பார்த்து பல நிறுவனங்கள் ‘தனிமை பொருளாதாரம்’ (Loneliness Economy) என்ற புதிய வணிக மாதிரியை உருவாக்கி வருகின்றன. இதன் மூலமாக மனிதர்களுக்கு துணை, சமூக இணைப்பு, உணர்வுப்பூர்வ ஆதரவு போன்ற சேவைகளை வழங்குவதாகக் கூறி இந்தத் துறை வேகமாக வளர்ந்து வருகிறது.
ஆனால் இதனால் வரும் ஆபத்து பற்றி மனநல நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். “மெய்நிகர் (virtual) உலகில் அதிக நேரம் செலவிடுவதால், நிஜ வாழ்க்கைச் சூழல்களை எதிர்கொள்ளும் திறன் குறைந்து வருகிறது. ஏஐ சாட்பாட்களுடன் தொடர்ந்து பேசுவது சில நேரங்களில் தனிமையை மறைப்பது போலத் தோன்றினாலும், அது உண்மையான மனநிறைவை வழங்காது.
இன்றைய இளைஞர்களுக்கு உண்மையான வாழ்க்கை உணர்வுகளையும் உறவுகளையும் கையாளுவது சவாலாகி வருகிறது. அதனால் மெய்நிகர் உலகில் அல்லாமல், நிஜ உலகில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கையை அதன் இயல்பிலேயே ஏற்றுக்கொண்டு வாழ வேண்டும்” என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
நம்மைச் சுற்றி சமூக உறவுகள் இருந்தாலும், அதிக நேரம் ஏஐ மற்றும் இணைய உலகிலேயே இருப்பதால் எது உண்மை, எது மாயை என்பதை உணர முடியாமல் போகிறது. எல்லாமே இருந்தாலும் மனநிறைவு இருப்பதில்லை. காரணம், பிறருடன் தொடர்ந்து ஒப்பிட்டுக் கொண்டே இருப்பதுதான். அதனால் நண்பர்கள் இல்லை என்ற உணர்வும், தனிமையும், பதற்றமும் மனதில் அதிகரிக்கின்றன. தொழில்நுட்பம் உலகத்தை இணைத்து இருக்கலாம். ஆனால் மனங்களை உணர்வோடு வைப்பது மனிதர்களால் மட்டும் தான் முடியும்.
