கோவை மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித் துறை மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில் சங்கம் இணைந்து நடத்தும் கோயம்புத்தூர் புத்தக திருவிழா 2025, கொடிசியா வளாகத்தில் ஜூலை 18ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்த லோகா வெளியிட்டு நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் பவன் குமார், கொடிசியா அமைப்பின் நிர்வாகிகள் லோகோவை வெளியிட்டனர். புத்தக கண்காட்சியில் 280க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.

மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கூறுகையில்: கடந்த ஆண்டு நடத்தப்பட்ட புத்தக கண்காட்சியை 74 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.  இந்த ஆண்டு இளம் படைப்பாளர்களுக்கான பயிற்சிகளும் விருதுகளும் அளிக்கப்பட உள்ளது. பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  அரசு பள்ளி மாணவர்கள் புத்தக கண்காட்சிக்கு வந்து செல்வதற்கு இலவச பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது என தெரிவித்தார்.