கடந்த முறை மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் கிணத்துக்கடவில் வெற்றியை திமுக இழந்த நிலையில், இம்முறை திமுக வேட்பாளரான சபரி கார்த்திகேயனுக்கு அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் இந்த தொகுதி மக்கள் வெற்றியை வழங்கவேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இன்று கோவை வந்த அவர், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், இந்தி திணிப்புக்கு எதிராக ராணுவத்தையே சந்தித்த வீரமும் துணிச்சலும் கொண்டது கோவை மண். இங்கு உள்ள மக்களை சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என கூறினார்.

இந்த தொகுதி முழுவதும் உள்ள மக்களின் மரியாதையை பெற்ற கே.வி கந்தசாமியின் பேரன் சபரி கார்த்திகேயன். சபரியின் ரத்தத்தில் மக்கள் பணியாற்றுவது ஊறிப்போய் உள்ளது என குறிப்பிட்ட அவர், அவரை வெற்றிபெற செய்தால் நிச்சயமாக அவர் மக்களின் குரலாக சட்டமன்றத்தில் ஒலிப்பார், குறைகளை தீர்த்து வைப்பார் என உறுதியளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கிணத்துக்கடவு தொகுதியில் திமுக அரசு தங்க நகை தொழில்பூங்கா அமைக்கும் பணி, சிப்காட் தொழிலாளர்களுக்கு விடுதி என பல்வேறு பணிகளை செய்துள்ளதை குறிப்பிட்டு, திமுகவின் கூட்டணிக்கு சாதகமாக, இந்த தொகுதியில் சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு அளிக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார்.