கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானியாற்று கரையோர பகுதியான தேக்கம்பட்டி என்னுமிடத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் முதன்முதலாக கோயில் யானைகளுக்கான புத்துணர்வு நலவாழ்வு முகாம் நடத்தப்பட தொடங்கியது.
தமிழக அரசின் உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் இம்முகாம் ஆண்டுதோறும் நவம்பர் மாத இறுதியில் துவங்கி ஜனவரி மாத துவக்கத்தில் முடிவடைவது வழக்கம். தொடர்ந்து 48 நாட்கள் நடத்தப்படும் இந்த யானைகள் நலவாழ்வு புத்துணர்வு முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோவில்கள் மற்றும் திருமடங்களுக்கு சொந்தமான சுமார் முப்பது முதல் நாற்பது யானைகள் வரை பங்கேற்கும்.
முகாம் நடைபெறும் நாட்களில் யானைகளுக்கு பிடித்தமான மற்றும் சத்தான உணவுகள், தினசரி இருமுறை பவானியாற்று நீரில் ஷவர் பாத் குளியல் மற்றும் நடைப்பயிற்சி, மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை என அதன் வழக்கமான கோவில் சார்ந்த பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு இயற்கை சார்ந்த இடத்தில் ஓய்வு அளிக்கப்படும். மேலும், காடுகளில் கூட்டமாக வாழும் இயல்புடையது யானைகள் என்ற நிலையில் கோவில்களில் ஆண்டு முழுவதும் தனித்திருக்கும் வளர்ப்பு யானைகள் முகாம் நாட்களில் பிற யானைகளோடு சேர்ந்து இருக்கும் வாய்பும் கிடைக்கின்றது..
2012 முதல் 2021 வரை பத்தாண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்ற யானைகள் நலவாழ்வு முகாம் அதன் பின்னர் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, கோவில் யானைகளுக்காக நலவாழ்வு முகாமை வழக்கம் போல் மேட்டுப்பாளையத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது..
அதற்கான முன்னேற்பாடு பணிகளை இன்று இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள் ஏற்கனவே யானைகள் நலவாழ்வு முகாம் நடைபெற்று வந்த இடத்தை ஆய்வு செய்தனர்.
ஏற்கனவே நடைபெற்ற முகாமில் யானைகள் கட்டி வைக்கப்படும் இடங்கள், பாகன்கள் தங்கும் அறைகள் அமைக்கப்படும் பகுதி, உணவு கூடம், யானைகளுக்கான தீவனங்கள் வைக்கும் இடம், பவானி ஆற்றில் கரையோரம் யானைகள் குளிப்பதற்கான ஷவர்கள் அமைக்கப்படும் இடங்கள், யானை நடை பயிற்சி செல்லும் இடம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகள் கலந்தாலோசனை நடத்தினர்.
மேலும் முகாமை சுற்றி சோலார் மின்வேலி, கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள் உள்ளிட்ட பல்வேறு விபரங்களையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
