“நான் இங்கு உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என கேட்க வந்தேன் ஆனால் நீங்கள் ஏற்கனவே உதயசூரியனுக்கு வாக்களிக்க முடிவு செய்து உள்ளீர்கள் என நம்புகிறேன். கோவை மாவட்டத்தில் உள்ள எழுச்சியை பார்க்கும் போது நிச்சயம் அனைத்து தொகுதியிலும் வெற்றி உறுதி என்பது தெரிகிறது,” என உதயநிதி ஸ்டாலின் தனது கோவை பிரச்சாரத்தில் தெரிவித்தார்.

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் செந்தமிழ் செல்வன் மற்றும் கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி ஆகியோரை ஆதரித்து வெள்ளிக்கிழமை வி.கே.கே. மேனன் சாலையில் அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது வாக்காளர்களிடம் கடந்தமுறை போல அல்லாமல் இம்முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெற செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சில ஆண்டுகளாகவே மேற்கு மண்டலத்தை திமுக-வின் கோட்டையாக செந்தில் பாலாஜி மாற்றி உள்ளார் என பெருமையாக குறிப்பிட்ட அவர், கரூர் இவருக்கு பிறந்த இடமாக இருந்தாலும் கோவை இவருக்கு புகுந்த வீடு, தேர்தல் அப்போது மட்டுமல்லாதது வருடம் முழுவதும் மக்களுடன் பயணிப்பவர் தான் செந்தில் பாலாஜி என அவரை பாராட்டி பேசினார்.

வடக்கில் போட்டியிடும் செந்தமிழ் செல்வனை பற்றி பேசுகையில், அவர் இளைஞர் அணியில் சிறப்பாக செயல்பட்டு, பல பொறுப்புகளை படிப்படியாக பெற்று முன்னேறி, எப்போதும் மக்களோடு மக்களாக இருப்பவர் எனவும், மக்கள் கோரிக்கை நிறைவேற்றுவதையே தனது கடமையாக பார்க்கும் குணம் கொண்டவர் எனவும் கூறினார்.

திமுக ஆட்சியில், கோவை தெற்கு தொகுதிக்கு 10.1 கி.மீ. மேம்பாலம், உலக தர நூலகம், செம்மொழி பூங்கா, ஆம்னி பேருந்து நிலையம், அறிவுசார் மையம் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் கோவை வடக்கில் ரூ.4 கோடி மதிப்பில் மருதமலை சாலை சீரமைப்பு, மேட்டுப்பாளையம் சாலையில் புது சந்தை வளாகம், சங்கனூர் ஓடை புனரமைப்பு, பில்லூர் 3ம் குடிநீர் திட்டம், மருதமலை கோவிலில் லிப்ட் வசதி என பல திட்டங்கள் கொடுத்துளோம் என கூறினார்.

மேலும் தற்போது, கோவை பெரியகடை வீதி மற்றும் க்ராஸ் கட் சாலை வியாபாரிகள் பயனடையும் வகையில் மல்டி லெவல் ஷாப்பிங் வளாகம் மற்றும் மல்டி லெவல் பார்க்கிங் வேண்டும் எனவும் புலியகுளம், அம்மன்குளம், காந்திநகர் பகுதி மக்களுக்கு பட்டா வேண்டும் எனவும் கேட்டுள்ளதாக கூறிய அவர், இவை  நிச்சயம் திமுக ஆட்சி அமைந்ததும் செய்துகொடுக்கப்படும் என உறுதி வழங்கினார்.

கோவை வாக்களர்கள் செந்தமிழ் செல்வனையும், செந்தில் பாலாஜியையும் வெற்றிபெற செய்யவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.