மாணவர்கள் சரியான நேரத்திற்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில், அரசு பள்ளிகளில் ஜூலை மாதம் முதல் “வாட்டர் பெல்” திட்டம் நடைமுறைக்கு வரும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளார். இதில் வகுப்புச் சூழல் பாதிக்கப்படாத வகையில், பள்ளிகளில் 3 முறை வாட்டர் பெல் அடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோடை வெயில் தாக்கம், விளையாட்டு நேரம் என தொடர்ச்சியாக உடல் ரீதியாக அதிக நேரம் செலவிடுவதால் மாணவர்களுக்கு நீர் சத்து குறைகிறது. இது கற்றல் திறனை பாதிக்கும். இதனால் மாணவர்கள் பள்ளி வேலையில் முறையாக தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில் வாட்டர் பெல் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அரசுப் பள்ளிகளில் ஜூலை மாதம் முதல் காலை 11 மணி, பகல் 1 மணி, பிற்பகல் 3 மணி என மூன்று முறை வாட்டர் பெல் அடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெல் அடிக்கும்போது, மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக 5 நிமிடம் இடைவெளி அளிக்கப்படும். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளில் இந்த முறை முன்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
